ஓர் இலக்கியவாதியின் மரணம்.. கவிஞர் நந்தலாலா இழப்பிற்கு வைரமுத்து இரங்கல் கவிதை!
சென்னை: கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலாலா, பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலமானார்.இவருக்கு வயது 69. நந்தலாலா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பட்டிமன்ற பேச்சாளரும்,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் நந்தலாலா. திருச்சி பற்றிய பல கட்டுரைகளை எழுதி உள்ள இவர், திருச்சி - ஊறும் வரலாறு மிக முக்கியமான கட்டுரையில் ஒன்று. இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு, ஓசூர் அருகில் உள்ள நாராயணா இருதய சிகிச்சை மருத்துவமனையில் பை பாஸ் சிகிச்சை செய்திருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்குமனைவி ஜெயந்தி, மகள்கள் பாரதி, நிவேதிதா உள்ளனர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஓர் இலக்கியவாதியின் மரணம்:
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,
கவிஞர் நந்தலாலாவின்
மறைவால்
இலக்கிய வட்டத்தில்
ஓர் இருள் விழுந்துவிட்டது
சமூகத்தின் வெளிவட்டத்தால்
அதிகம் அறியப்படாதவரும்
உள்வட்டத்தில்
கொண்டாடப்பட்டவருமான நந்தலாலா,
பகுத்தறிவாளர் முற்போக்காளர் சிந்தனையாளர்
சிறந்த பேச்சாளர்,
இத்தனை கலவைகளோடு
ஓர் இலக்கியவாதி
அமைவது அரிது
ஒரு தனிமனிதனின் மரணம்
வனாந்தரத்தில்
ஓர் இலை விழுவது போன்றது
ஓர் இலக்கியவாதியின் மரணம்
ஆலமரத்தில்
கிளை விழுவது போன்றது
என் நண்பரை இழந்து
நலிவடைகிறேன்
குடும்பத்தார்க்கும்
இலக்கிய அன்பர்களுக்கும்
என் இதய இரங்கல்
இனி திருச்சியைக்
கடக்கும்போதெல்லாம்
அவர் நினைவு
என் நெஞ்சைச் சுடும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இறுதிச்சடங்கு: நந்தலாலா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் நந்தலாலா உடல் பெங்களுரில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்படுகிறது. திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனால் நாளை 11 மணி முதல் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்..


Click it and Unblock the Notifications











