நகலெடுக்க முடியாத உடல்மொழி.. சூரிய சுறுசுறுப்பு.. வசப்படுத்தும் வசீகரம்.. ரஜினியை புகழும் வைரமுத்து!
சென்னை: தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்தை தனது பாணியில் புகழ்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தடம் பதித்து 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

ஹேஷ்டேக்
இதனை கொண்டாடும் வகையில், நடிகர்கள் மோகன் லால், மட்மூட்டி, சிவாகார்த்திகேயன், நடிகை ஷ்ரேயா, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் என பலரும் ரஜினியின் காமன் டிபியை வெளியிட்டு வருகினற்னர். #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கும் ட்ரென்ட்டாகி வருகிறது.

சமூக வலைதளங்கள்
நடிகர் ரஜினியின் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களும் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். பலரும் நடிகர் ரஜினிகாந்த் 45 ஆண்டுகளை கடந்திருப்பதை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ரஜினியின் பெயரே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வியப்பின் கலைக்குறியீடு!
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகள் நிறைவு செய்வதை பாராட்டி கவிதை மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருப்பதாவது,
நகலெடுக்க முடியாத
உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!
இவ்வாறு ரஜினிகாந்தின் டிவிட்டர் கணக்கை குறிப்பிட்டு கூறியிருக்கிறார் வைரமுத்து.

ரசிகர் கவிதை
அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி கவிஞரே என நன்றி கூறியுள்ளனர். மேலும், தங்களின் கவிதைகளை குறிப்பிட்டும் ரஜினிக்காந்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர், உலகின் ஒன்பதாவது அதிசயம்..
முன்னோரும் ரசித்தனர்..
என்னோரும் ரசிக்கின்றனர்..
பின்னோரும் ரசிப்பர்..
தலைமுறைகள் கடந்த சரித்திர நாயகன்...
கஜினியைத் தாண்டிய ரஜினி..!!!! என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் இல்லாமல் நான் இல்லை
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்திருந்தார். அதில் என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











