twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்!

    |

    சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தின் பல்வேறு ஊர்களைச் சார்ந்த 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகள் வழங்கிய நிகழ்ச்சி தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்றது. கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.டி.செல்வகுமார் ஆடுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    Vairamuthu requests center allot huge fund for cyclone Gaja afftected people

    விழாவைத் தஞ்சை வெற்றித்தமிழர் பேரவைவைச் சேர்ந்த செழியன், ஆசிப் அலி, சுப்பிரமணி, கலப்பை மக்கள் இயக்கத்தின் வி.கே.வெங்கடேசன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.

    விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

    "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படுமாறு 1008 குடும்பங்களுக்கு இன்று ஆடுகள் வழங்கியிருக்கிறோம். ஒரு விவசாயி வீட்டில் ஆடுமாடுகள் என்பவை ரேசன் கார்டில் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர்கள். ஆள் செத்த வீட்டைவிட ஆடு செத்த வீடு துன்பமானது; மனிதர் செத்த வீட்டைவிட மாடு செத்த வீடு துன்பமானது.

    ஒரு பசுமாடு - ஓர் ஆடு - ஒரு முருங்கை மரம் - ஒரு வெட்டரிவாள் - 50டன் அரிசி - 5000 வார்த்தைகள் இவ்வளவோடு ஒரு விவசாயியின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் இழந்துவிட்டால் கிராமத்து மக்களுக்கு ஏது வாழ்க்கை? புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் வேளாண் குடும்பத்து பெருமக்களே... எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள்.

    சமுதாயத்தில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை. உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களில் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.

    கஜா புயலை கணக்கெடுக்க வந்த மத்தியக் குழுவினர் கால்களில் விழுந்து சிலபேர் கண்ணீர் விட்டார்கள். யாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை. கேட்பது உங்கள் உரிமை; கொடுப்பது அவர்கள் கடமை. ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்பது எங்கள் எண்ணம். சுட்ட ஓட்டில் சொட்டுநீர் விழுந்ததுமாதிரி இருக்கிறது இந்தச் சிறிய தொகை. இன்னும் பெருந்தொகை வழங்கப்பட வேண்டும்.

    விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சமுதாயம் இரக்கத்திற்குரியது. இந்தியா முழுதும் விவசாயத்திற்கு மாற்றுத் தொழிலும் கண்டறியப்பட வேண்டும். மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று தேவைகள் இருக்கின்றன. இன்றைய தேவை சோறு; நாளைய தேவை அரிசி; எதிர்காலத் தேவை விதைநெல். இந்த மூன்றுக்கும் உத்திரவாதம் வழங்கப்படாவிட்டால் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

    சொந்த ஊரில் பிறந்து படித்து ஊரைவிட்டுப் போன இளைஞர்கள் தாய் கிராமத்திற்கு திரும்ப வரவேண்டும். குடும்பம் - ஊர் - உறவு ஆகிய மூன்றுக்கும் உதவி செய்ய வேண்டும். நிலங்களிலெல்லாம் தென்னை மரங்கள் பிணங்களாக விழுந்துகிடக்கின்றன. தென்னை மரத்திற்கு உயிருண்டு என்று நம்புவதால் அதை 'தென்னம்பிள்ளை' என்று விவசாயி அழைத்தான். இழந்த மரங்கள் நடப்பட வேண்டும்.

    இந்தியா முழுவதிலிருந்தும் பிலிப்பைன்சிலிருந்தும் தேவையான தென்னங்கன்றுகள் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். தென்னை மரங்கள் பலன்தரும் வரைக்கும் அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்". இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

    English summary
    The tamil poet Vairamuthu requested the entral government to allot huge fund for the people affected by cyclone Gaja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X