தற்கொலை செய்தால்தான் பாட்டு எழுத முடியுமா?.. வைரமுத்து கேள்வி!

பாலாவின் பரதேசி படத்தின் ஆடியோ நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வைரமுத்து வெளியிட்டார். நடிகர்கள் விக்ரம், சூர்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் வைரமுத்து பேசுகையில், இப்படத்தில் படத்தில், ஒரு வாழ்க்கை பிம்பப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, ஒரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். மாறுபட்டு சிந்திக்கிறவன், எப்போதுமே கவனிக்கப்படுகிறான்.
வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்வதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
இந்த படத்தில், கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா? என்று ஒரு பாடல் எழுதியிருந்தேன். இதை, செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா? என்று மாற்றிக் கொள்ளலாமா? என்று டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக்கொண்டேன்.
ஒருமுறை நான் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, என் அருகில் டைரக்டர் மகேந்திரன் அமர்ந்திருந்தார். அவர் மது அருந்திக்கொண்டிருந்தார். நீங்களும் அருந்துகிறீர்களா? என்று என்னிடம் கேட்டார். எனக்கு பழக்கம் இல்லை என்றேன்.
குடிக்கிற அனுபவம் இல்லை என்றால், குடிகாரனைப் பற்றி எப்படி பாட்டு எழுதுவீர்கள்? என்று மகேந்திரன் கேட்டார். தற்கொலை செய்வது பற்றி பாட்டு எழுத வேண்டுமானால், தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்ன? என்று சிரித்துக்கொண்டே நான் கேட்டேன். மகேந்திரன் வாய்விட்டு சிரித்தார்.
எல்லாவற்றையும் அனுபவித்து எழுத முடியாது. உள்ளுணர்வை வைத்து எழுத முடியும் என்றார் வைரமுத்து.


Click it and Unblock the Notifications











