மணி விழா காணும் 'கவி முத்து'.. ஜூலை 13ல் 60 வயதைத் தொடுகிறார் வைரமுத்து!
சென்னை: கவிஞர் வைரமுத்துக்கு 60 வயதாகப் போகிறது. ஜூலை 13ம் தேதி அவர் தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.
வழக்கமாக தனது பிறந்த நாளை கவிஞர்கள் நாளாக கொண்டாடுவார் வைரமுத்து. இந்த முறை கலை இலக்கியத் திருவிழாவாக கோவையில் கொண்டாடப் போகிறார்.
ஜூலை 13ம் தேதியன்று கோவையில் நடைபெறும் இந்த திருவிழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மணி விழா - பாராட்டு விழா
கலை இலக்கிய விழாவுக்கு அப்துல் கலாம் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து மணி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து பத்மபூஷண் விருது பெற்றமைக்கான பாராட்டு விழாவும் நடைபெறும்.

தமிழர்களும், அறிஞர்கள்
உலகத் தமிழர்களும், தமிழறிஞர்களும் இதில் பெரும் திரளாக பங்கேற்கவுள்ளனர்.

விழிப்புணர்வுத் தமிழ் நடை
விழாவுக்கு முன்பு 12ம் தேதி தமிழ் சார்ந்த விழிப்புணர்வு தமிழ் நடைப் பேரணி ஒன்றும் நடத்தப்படவுள்ளதாம். அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயம் ஆக்குங்கள், தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக வேண்டும் என்பது இந்தப் பேரணியின் நோக்கங்களாம்.

கருணாநிதி இல்லை
வழக்கமாக வைரமுத்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி தவறாமல் பங்கேற்பார். இந்த முறை கோவையில் நடைபெறும் விழா என்பதால் உங்களைத் தொந்தரவு செய்யவில்லை என்று வைரமுத்து கூற, அதை கருணாநிதி ஏற்றுக் கொண்டாராம்.
இளைய நிலா தொடர்ந்து பொழியட்டும்.. இதயங்களை தமிழால் நனைக்கட்டும்... வாழ்த்துவோம் வைரமுத்துவை!


Click it and Unblock the Notifications











