Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச்.. எனக்கு பிடிமானமே இல்லை.. வைரமுத்து புலம்பல்
சென்னை: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவிருக்கும் சூழலில் வைரமுத்து பதிவு செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சூழலில் இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. ட்ரெய்லரானது இரவு 9.30 மணிக்கு வெளியாகிறது. ட்ரெய்லரை கமல் ஹாசன் வெளியிடுகிறார்.

பொன்னியின் செல்வனிலிருந்து ஒதுக்கப்பட்ட வைரமுத்து
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகிறது என்ற அறிவிப்பு வெளியானவுடன் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு எழுந்ததோ அந்த அளவுக்கு படத்தின் பாடல்களை யார் எழுதப்போகிறார் என்பதுதான். சங்க கால மொழியை பாடல்களில் அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் வந்த எதிர்பார்ப்பு அது. வைரமுத்து எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கு பதிலாக இளங்கோ கிருஷ்ணன் பாடலாசிரியராக அறிவிக்கப்பட்டார்.

ஒதுக்கப்பட்ட வைரமுத்து; ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகவே அமைந்தது. ஏனெனில் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி ரோஜா படத்திலிருந்து ஆரம்பித்தது. அந்தப் படத்திலிருந்து மூவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய ஓகே கண்மணி படம் வரை கொடுத்த பாடல்கள் அனைத்தும் எவர்க்ரீன் பாடல்களாக அமைந்தன. நிலைமை இப்படி இருக்கும் சூழலில் பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர படத்துக்கு வைரமுத்துவை மணிரத்னம் பயன்படுத்தியிருக்க வேண்டும் என பலர் கூறினர். ஆனால் அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்ததால்தான் அவர் பொன்னியின் செல்வனிலிருந்து ஒதுக்கப்பட்டார் என கூறப்படுகிறது.

ட்ரெண்டான வைரமுத்து ட்வீட்
பொன்னியின் செல்வனிலிருந்து ஒதுக்கப்பட்டாலும் அவரை இசை வெளியீட்டு விழாவுக்கேனும் அழைத்திருக்க வேண்டும் என வெளிப்படையாகவே கருத்து வைக்கப்பட்டது. இருப்பினும் வைரமுத்து இந்த விவகாரம் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கமல் இருக்கும் வரை ரஜினிக்கும் ரஜினி இருக்கும் வரை கமலுக்கும் விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும் அஜித் இருக்கும் வரை விஜய்க்கும் ஒரு பிடிமானம் இருக்கும் எனக்கிருந்த பிடிமானத்தை பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே காற்றில் கத்தி சுற்றிக்கொண்டிருக்கிறேன்" என வைரமுத்து ட்வீட் செய்திருக்கிறார்.

ட்வீட் மூலம் மௌனம் கலைத்த வைரமுத்து
வைரமுத்துவின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், "கமலுக்கு ரஜினியும், ரஜினிக்கு கமலும், அஜித்துக்கு விஜய்யும், விஜய்க்கு அஜித்தும்தான் போட்டி. அந்தப் போட்டி இருக்கும்வரைதான் பிடிமானம் இருக்கும். அதுபோல் வாலிதான் வைரமுத்துவுக்கு போட்டி. இப்போது வாலி உயிரோடு இல்லை. எனவே தனக்கு இப்போது யாருமே போட்டி இல்லாததால் பெரிதாக பிடிமானம் இல்லை. எனவே பொன்னியின் செல்வனிலிருந்து தன்னை ஒதுக்கியதை நினைத்து அலட்டிக்கொள்ளவே இல்லை. தனக்கு ஈடாக இப்போது யாருமே திரைப்பாடல்களில் இல்லை" என்பதைத்தான் வைரமுத்து சூசகமாக தெரிவித்திருக்கிறார் என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











