twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

    By Chakra
    |

    Vairamuthu
    சென்னை: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கவியரசு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் திருநாளில் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. இந்திய அரசு தேசிய அடையாளங்களாக சிலவற்றை பேணி வருகிறது. ஆனால், தேசிய நூல் என்ற ஓர் அடையாளம் இன்று வரை உண்டாக்கப்படவில்லை. இனம் கடந்து மொழி கடந்து இடம் கடந்து உலக பொதுமறையாக திகழும் 'திருக்குறள்' தான் தேசிய நூலாக திகழ முடியும் என்று தமிழர்கள் நம்புகிறோம்.

    எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுகிறோம். ஒரு கருத்து நூறு ஆண்டுகள் நீடிப்பதே அரிது. ஒரு கருத்து இரு நூறு ஆண்டுகள் நீடிப்பது அரிதினும் அரிது. ஆனால், ஒரு தமிழன் சொன்ன கருத்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நீடித்து உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்து நிற்கிறது. அது தமிழனின் பெருமை.

    காப்பு கட்டுவது ஏன்?:

    தமிழர்கள் மரபுவழி அடையாளங்களை இழந்து வருகிறார்கள். பொங்கல் திருநாளின்போது இல்லங்களில் காப்புக் கட்டுவார்கள். காப்பு என்றால் உயிர்க் காப்பு என்று பொருள் கொள்ள வேண்டும். இதன் உள்ளீடு என்ன என்பதை உங்களுக்கு சொல்வதை நான் கடமையாக கருதுகிறேன்.

    காப்பு நான்கு தாவரங்களைக் கொண்டு கட்டப்படுவது. கூழைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை, வேப்பிலைகளால் கட்டப்பட்டு வீட்டின் கூரைகளில் செருகப்படும். கூழைப்பூ பாம்புக்கடிக்கு சிறந்த விஷமுறிவு மருந்தாகும். பாம்பு கடித்து விட்டது என்று அறிந்தவுடன் கூழைப்பூவை கசக்கிச் சாறெடுத்து கண்ணில் விட்டால் அது விஷத்தை முறிக்கும் என்பது தமிழர்கள் கண்டறிந்த உண்மையாகும்.

    அந்த கூழைப்பூவை பாதுகாக்கத்தான் வேப்பிலையும், மாவிலையும், ஆவாரம்பூவும் ஒன்றாக கட்டப்படுகின்றன. இப்படி பொருளறியாத பல தமிழ் மரபுகளை நாம் அறிந்து பாதுகாக்க வேண்டும்.

    யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற பொது உடைமை நோக்கில்தான் வீட்டுக்கு வெளியே காப்பு கட்டப்படுகிறது. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ளவே இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இந்த அடையாளங்களை எல்லாம் தமிழர்கள் மறந்துகொண்டே வருகிறார்கள். அவற்றின் பொருள் அறிந்து தமிழர்கள் புதுப்பிக்க வேண்டும்.

    ஜெயலலிதா அரசுக்கு நன்றி!:

    திருவள்ளுவர் திருநாளில் உலகத் தமிழர்களுக்கு ஒரு செய்தி. திருக்குறளை அனைவரும் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். திருக்குறளைப் பாதுகாப்பது என்பது அதை ஓதுவது மட்டுமல்ல. உணர்வது மற்றும் வாழ்வது. இதுதான் திருவள்ளுவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் பாதுகாக்க குரல் கொடுத்த கலைஞருக்கும், அதைச் செவிமடுத்துப் செயல்படுத்தும் தமிழக அரசுக்கும் எனது நன்றியை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.

    இளைய தலைமுறையினர் சபதம் எடுக்க வேண்டும்:

    இந் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் பொங்கல் விழா மற்றும் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் புத்தகத்தின் திறனாய்வு விழிப்புணர்வு விழா ஆகியவை நடந்தன.

    அதில் பேசிய வைரமுத்து, மொழி என்பது மற்றவர்களுக்கு வேறு. தமிழர்களுக்கு வேறு. தற்போது வட இந்திய உணவுகள் பீட்சா போன்றவை நம்மை ஆக்கிரமித்து உள்ள நிலையில், தமிழக உணவுகளான கம்பு, சோளம், தினை, ராகி ஆகியவை எங்கே உள்ளது என்று தேட வேண்டி உள்ளது.

    தமிழகத்தில் உணவுகள் மாறி விட்டன. உடைகள் மாறி விட்டன. ஆனால், தாய்மொழி மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் தாய் மொழியை மறக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். சொல் வளத்தை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

    தற்கொலை என்பது முடிவல்ல:

    எந்தவொரு நிலையிலும் தற்கொலை என்ற முடிவை எடுக்கக் கூடாது. இது வாழ்வதற்காக பிறந்த மண். தற்கொலை என்பது முடிவல்ல. எனவே, முடிந்த வரை போராட வேண்டும்.

    மதித்தல், நேசித்தல் என்பது தமிழர்களின் பண்பாடு. சாட்சிகள் இல்லாத இடத்தில் நேர்மையாக இருப்பதே மிகச் சிறந்த ஒழுக்கமாகும். மனக்கட்டுப்பாடு என்பதே வாழ்க்கையின் கட்டுப்பாடாகும்.

    பிறமொழியை நேசியுங்கள்.. தமிழ் மொழியை சுவாசியுங்கள்:

    படைப்பு என்பது சுகமான சொற்களையும், நயமான கதைகளையும் கொண்டதாகும். ஒருவர் படைக்கும் படைப்புகள் படிப்பவர்களின் கண்களை அறையும் வகையிலும், இதயத்தை வருடும் வகையிலும் இருக்க வேண்டும். பிறமொழியை நேசியுங்கள். ஆனால், தமிழ் மொழியை சுவாசியுங்கள் என்றார்.

    English summary
    Poet Vairamuthu has urged the Centre to declare Thirukural be as National book
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X