ஒத்தப் பனமரமா ஒத்தையில நிக்கிறனே.. பனை மரம் படத்துக்காக வைரமுத்து எழுதிய வைர வரிகள்!
சென்னை: இயக்குநர் ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகி வரும் பனை படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.

பாடலாசிரியர் வைரமுத்துவின் வரிகளில் வெளியாகும் பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மனம் கவரும் பாடல்களாக அமைந்து வருகின்றன.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை வென்ற கவிஞர் என்கிற பெருமைக்குரியவர் வைரமுத்து.
1980ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் காளி படத்தில் பாடல் வரிகளை எழுத ஆரம்பித்த வைரமுத்து 2019ம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் படம் வரை பாடல்களை எழுதியுள்ளார்.
நாட்படு தேறல் எனும் தனது பாடல் வரிகளை ஆல்பம் பாடல்களாக மாற்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வரும் வைரமுத்து தற்போது, புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் பனை படத்திற்காக பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
"பனை.. மண் சார்ந்த மரமும்.. மரம் சார்ந்த மக்களுக்குமான படம்" எனக் குறிப்பிட்டு இந்த பாடல் வரிகளை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார் வைரமுத்து.
"ஒத்தப் பனமரமா
ஒத்தையில நிக்கிறனே
மாமியாள அடகுவச்சு
மாம்பழமா நான் கேட்டேன்
நாத்தனாரை அடகுவச்சு
நவ்வாப்பழமா நான் கேட்டேன்
பிஞ்சுக் கழுத்துக்கு
மஞ்சத் தாலிதான் கேட்டேன்"
என மிகவும் வித்தியாசமான வரிகளுடன் மரம் சார்ந்த மக்களுக்கான படத்திற்காக தனது பங்கையாற்றியுள்ளார் வைரமுத்து.

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் தயாரித்து வரும் பனை படத்தை இயக்குநர் ஆதி P ஆறுமுகம் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். விரைவில் மரங்களின் பாதுகாப்பை உணர்த்தும் பனை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
கவிஞர் வைரமுத்துவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கிறது என பாராட்டி வருகின்றனர்.
பனை படத்திற்கு மட்டுமின்றி மேலும், புதிய படங்களுக்கு பாடல் வரிகளை எழுதும் பணியை செய்து வருகிறார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











