Amaran: சிவகார்த்திகேயன் செத்துப்போவாரானு சொல்றது அநாகரீகம்.. அது தப்புங்க.. பளிச்சுனு சொன்ன பிரபலம்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர், தமிழ்நாட்டினைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தினை விமர்சனம் செய்த பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது பழைய வீடியோவில், இணையவாசி ஒருவர் கமெண்ட் செய்தததை வைத்து, சிவகார்த்திகேயனை மிகவும் மோசமாக பேசியிருந்தார். அதனை பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைபேச்சு அந்தணன் அநாகரீகம் எனக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம், இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸில் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது. படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தது. படம் வசூலில் இதுவரை இந்தியாவிலேயே ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 150 கோடிகளுக்கு மேல் வசூல் ஆகியிருக்கும் என கூறப்படுகின்றது. படம் எப்படியும் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் தியேட்டரிலேயே வசூல் செய்துவிடும் என கூறப்படுகின்றது.

சிவகார்த்திகேயன்: படத்தினை விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன், சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் தான் விமர்சனம் செய்திருந்த செவ்வாய்க்கிழமை படத்தின் விமர்சன வீடியோ குறித்தும் பேசினார். அதில் படத்தின் கதையைக் கூறிவிட்டு, இணையவாசி ஒருவர் கமெண்ட் செய்ததையும் குறிப்பிட்டார். அதாவது செவ்வாய்க்கிழமை படத்தின் விமர்சன வீடியோவுக்கு இணையவாசி ஒருவர், " அப்படினா வரும் செவ்வாய்க்கிழமை சிவகார்த்திகேயன் செத்துப்போயிடுவாரா" என கமண்ட் செய்ததாக கூறினார்.

கண்டனம்: ப்ளூ சட்டை மாறனின் இந்த பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தினை விமர்சனம் செய்பவர் படத்தை மட்டும் விமர்சிக்கலாம் அல்லவா? எதற்காக தனிமனித தாக்குதலில் ஈடுபடவேண்டும். மேலும் ப்ளூ சட்டை மாறனின் நடவடிக்கை என்பது மிகவும் அநாகரீகமானது என பலரும் கருத்து தெரிவித்தனர். நடிகர் கலையரசன் தனது எக்ஸ் பக்கத்தில் நேரடியாகவே ப்ளூ சட்டை மாறனை டேக் செய்து தனது கண்டனங்களைத் தெரிவித்தார். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைபேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் இது தொடர்பாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அநாகரீகம்: ப்ளூ சட்டை மாறன் எனது நண்பர்தான், இதனை நான் நேரடியாகவே கூறுவேன். இப்போது நீங்கள் கேள்வி கேட்டதால் பதில் அளிக்கின்றேன். ஒரு படத்தினைப் பார்க்கும் அனைவருக்கும் அதனை விமர்சிக்க அனைத்து உரிமையுள்ளது. அது அவரவர் பாணியில் விமர்சிக்கலாம். ஆனால் ஒருவர் செத்துப்போயிடுவாரா எனக் கூறுவது அநாகரீகம். இதனை அவர் தவிர்த்திருக்கவேண்டும்.

சிவகார்த்திகேயன் குறித்து பேச நினைத்திருந்தால் அதனை தனி வீடியோவாக அவர் பதிவிட்டிருக்கலாம். ஆனால் படத்தின் விமர்சனத்தோடு அதனை இணைத்துப் பேசியது தவறு. அப்படி தனியாக அவரை விமர்சித்துப்பேசினாலும், மரணம் குறித்து பேசுவது தவறு. அனைவருக்கும் குடும்பம் உள்ளது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதனைப் பார்க்கும்போது வருத்தப்படுவார்கள் என்பதை யோசித்திருக்கவேண்டும்" என பேசினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











