விஜய், அஜித்தை விட ரஜினிகாந்த் இவ்வளவு கம்மியாவா சம்பளம் வாங்குறாரு.. சர்ச்சையை கிளப்பிய பிஸ்மி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என பேசி ரஜினி ரசிகர்கள் வீட்டுக்கே சென்று வெளுத்துக் கட்டும் அளவுக்கு சமீபத்தில் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மியின் பேச்சு இருந்தது. இந்நிலையில், விஜய், அஜித்தை விட ரஜினிகாந்தின் சம்பளம் குறைவு என அவர் போட்டுள்ள ட்வீட் ரஜினிகாந்த் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
நடிகர்களின் சம்பளம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் குறித்து டிராக்கர்கள் இஷ்டத்துக்கு அளந்து விட்டு வருகின்றனர் என்கிற பேச்சு சினிமா வட்டாரத்திலேயே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கோடிக் கணக்கில் நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், தினக்கூலிகளில் சம்பள நிலை என தற்போது பிஸ்மி போட்ட ட்வீட்டிலும் நடிகர் ரஜினிகாந்தின் சம்பளத்தை வேண்டுமென்றே குறைத்துப் போட்டுள்ளார் என ரஜினி ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர்.

முன்னாள் சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே சூப்பர் ஸ்டார் என்று எந்தவொரு பிரபல நடிகரை கேட்டாலும் டக்கென ரஜினிகாந்தின் பெயரைத் தான் அனைவரும் சொல்வார்கள். தொடர்ந்து தனது படங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில், முன்னாள் சூப்பர் ஸ்டார் என பிஸ்மி பேசியது ரஜினி ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ஆபிஸுக்கே சென்று மிரட்டல்
முன்னாள் சூப்பர் ஸ்டார் என பிஸ்மி சொன்னதை கேட்டு ஷாக்கான ரஜினி ரசிகர்கள் நேரடியாக பிஸ்மியின் அலுவலகத்துக்கே சென்று மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஆனால், ஜாலியாகத்தான் பேசி சென்றனர் என்று வீடியோ போட்ட பிஸ்மி, அதன் பின்னர் டிவி விவாதத்தில் எப்படிங்க மிரட்டலாம் என்றும் பேசியிருந்தார்.

கமெண்ட் செக்ஷன் ஆஃப்
நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் அஜித் மற்றும் ரஜினிக்கு எதிராகவும் தொடர்ந்து பிஸ்மி பேசி வருவதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பிய நிலையில், தனது ட்விட்டர் கமெண்ட் செக்ஷனையே ஆஃப் செய்து விட்டார் பிஸ்மி. அவர் பதிவிடும் ட்வீட்டுக்கு கீழ் படு கேவலமான கமெண்ட்டுகளும் திட்டுக்களும் குவிந்து வந்ததே இதற்கு காரணம் என்கின்றனர்.

ரஜினி, விஜய், அஜித் சம்பளம்
இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட்டாக பிஸ்மி பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று டிரெண்டாகி வருகிறது. அதில், நடிகர் விஜய் தளபதி 67 படத்திற்கு 125 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் நடிகர் அஜித் ஏகே 62 படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் ஜெயிலர் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 80 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூலித் தொழிலாளிகளின் நிலை
மேலும், அந்த ட்வீட்டில் பெயின்டர் சம்பளம் ஒரு நாளைக்கு 800 ரூபாய் என்றும் மேஸ்திரியின் சம்பளம் 900 ரூபாய் என்றும், கார்பென்டர் சம்பளம் 6000 ரூபாய் என்றும் வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு மாதமே வெறும் 3000 ரூபாய் தான் என்றும் போட்டு கூலித் தொழிலாளர்களின் சம்பளமோ ரசிகர்களின் சம்பளமோ உயரவில்லை. நடிகர்கள் மட்டும் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர் என ட்வீட் போட்டுள்ளார்.

ரஜினிக்கு மட்டும் கம்மி
இந்த ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு 125 கோடி என்றும் அஜித்துக்கு 105 கோடி என்றும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வெறும் 80 கோடி தான் சம்பளமா என்றும் சமூக வலைதளங்களில் பிஸ்மியின் ட்வீட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு விளாசி வருகின்றனர். இதில், எந்த நடிகருடைய உண்மையான சம்பளம் இதுதான் என்பதை யாருமே அதிகாரப்பூர்வமாக சொல்ல முன் வரமாட்டார்கள் என்பது தனிக்கதை.


Click it and Unblock the Notifications











