தனுஷின் ஃபார்முலா அதுதான்.. ஆபத்து என்பதை உணரவே இல்லை.. பத்திரிகையாளர் ஓபன் டாக்
சென்னை: தனுஷ் நடிப்பில் ஜூலை 26ஆம் தேதி ராயன் படம் வெளியாகிறது. அந்தப் படம் அவருக்கு 50ஆவது படம் என்பதும்; அதனை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தவிர்த்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா, ஹிந்தியில் ஒரு படம், தமிழில் சில படங்கள் என படு பிஸியாக நடித்துவருகிறார் அவர். இந்தச் சூழலில் தனுஷ் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தனுஷ் திறமையான நடிகர்களில் ஒருவர். நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும், கேலிகளையும் சந்தித்தார். ஆனால் அவரது கடும் உழைப்பு அவரை மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயரத்தில் கொண்டுபோய் வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் கண்டிப்பாக தாக்குப்பிடிக்கமாட்டார் என்று கணிக்கப்பட்ட தனுஷ்தான் இன்று பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்துவருகிறார். அது ஒருவகையில் பலருக்கும் இன்ஸ்பிரேஷனே.

ராயன்: தனுஷ் இப்போது தனது 50ஆவது படமான ராயன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவரே இயக்கவும் செய்திருக்கும் அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் ராயன் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை தவிர்த்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேராவில் நடித்துவருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் தனுஷ்.
வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: ராயன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில்தான் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியிருப்பது தெரிகிறது. ஆனால் திரைக்கதையை தனுஷ் எப்படி செய்திருக்கிறாரோ என்று கேள்விகளை கேட்டுவருகின்றனர். இந்தச் சூழலில் ராயன் படம் மற்றும் தனுஷ் குறித்து பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
பிஸ்மி பேட்டி: அவர்அளித்த பேட்டியில், "நடிகர் தனுஷின் சமீபத்திய படங்கள் அனைத்திலும் கத்தி, ரத்தம் அதிகமாக இருக்கிறது. தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு அது மிகப்பெரிய சீரழி. இப்போதிருக்கும் இளைஞர்கள் திரைப்படங்களில் இருக்கும் நடிகர்களை பார்த்துதான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதிலும் நடிகர் தனுஷோ, அவனை போடு, இவனை போடு, செஞ்சிடுவேன் என்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்.
சாதாரண விஷயம் ஆகிவிட்டது: அதனை இளைஞர்களும் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். ஒருவரை கொலை செய்வது பலருக்கும் இப்போது சாதாரணமான விஷயமாகிவிட்டது. வடசென்னை, அசுரன், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் ஆக்ஷன் படங்களாக மட்டுமே வெளியாகின. இந்தப் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனால் அதை ஒரு ஃபார்முலாவாகவே தனுஷ் பயன்படுத்துகிறார். அதையே அடுத்தடுத்த படங்களுக்கு பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட படங்கள் இளைய தலைமுறையினருக்கு ஆபத்து என்பதை உணர மறுக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











