காதலர் தினம் தான் டார்கெட்.. இத்தனை படங்கள் ரிலீஸ்.. யாருக்கு கிடைக்கும் வெற்றி!
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் பல புதிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை 2020ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கான படங்கள் ஏதும் ரிலீசாகவில்லை.
ரஜினியின் தர்பார் மற்றும் தனுஷின் பட்டாசு ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆனாலும், அவை விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், பிப்ரவரி மாதமாவது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காதலர் தின கொண்டாட்டம்
பிப்ரவரி மாதம் என்றாலே அது காதலர்களுக்கான மாதம் தான். பிப்ரவரி 7ம் தேதி ரோஸ் டேவில் தொடங்கி, பிப்ரவரி 14 காதலர் தினம் வரை இளைஞர்கள் மத்தியில் கொண்டாட்டம் தான். காதலர்கள் மற்றும் இளைஞர்களை டார்கெட் செய்து பிப்ரவரி 7 மற்றும் பிப்ரவரி 14ம் தேதிகளில் பல படங்கள் ரிலீசாகவுள்ளன.

வானம் கொட்டட்டும்
மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா சபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, சரத்குமார், ராதிகா என பலர் நடிப்பில் உருவாகி உள்ள வானம் கொட்டட்டும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது. சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக உருவாகி உள்ள இந்த படத்தில் இடம் பெற்றுள்ள "கண்ணு தங்கம் ராசாத்தி" பாடல் எந்த வயது காதலர்களுக்கும் ஸ்பெஷல் பாடலாக இருக்கும்.

சீறு
விஜய்சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் வழங்கும் சீறு படமும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஜீவாவுக்கு பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு ஜீவாவுக்கு நல்ல ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் வெளியான பேப்பர் பாய், மஜ்னு படங்களில் நாயகியாக நடித்த ரியா சுமன் - ஜீவா காம்பினேஷன் நிச்சயம் காதலர்களுக்கான ட்ரீட்டாக அமையும்.

ஓ மை கடவுளே
காதலர் தினத்துக்கான சரியான படமாக அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி, வாணி போஜன், சாரா, கெளதம் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை கடவுளே படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

நான் சிரித்தால்
ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள நான் சிரித்தால் திரைப்படமும் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. துன்பம் வரும் வேளையில சிரிங்க என்ற வாசகத்துக்கு ஏற்ப சிரிப்பு வியாதி கொண்ட நாயகனுக்கு நடக்கும் பிரச்சனைகள் என கலகலப்பாக உருவாகி இருக்கும் இந்த படமும் இம்மாதம் திரையரங்குகளில் ரசிகர்களை திருப்தி படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வர் சுந்தரம்
ஜனவரி 31ம் தேதி டகால்டி படத்துடன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சர்வர் சுந்தரம் திரைப்படம், டகால்டி படத்துக்கு வழி விட்டது. இந்நிலையில், சர்வர் சுந்தரம் படமும் வரும் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலர் தினம் அன்று கவலைகளை மறந்து சிரிக்க வேண்டும் என்றால் தாராளமாக சர்வர் சுந்தரத்தை ட்ரை பண்ணலாம்.
Recommended Video

ஜானு
மேலும், சமந்தா, சர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி காதலர் தின கிஃப்டாக திரைக்கு வருகிறது. கடந்த மாதம் வெளியான அல்லு அர்ஜுனின் அலா வைகுந்த பரமுலோ மற்றும் மகேஷ் பாபுவின் சரிலேறு நிக்கேவரு ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை குவிந்த நிலையில், பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜானு திரைப்படம் டோலிவுட்டில் இம்மாதம் கல்லா கட்டும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











