கொரோனா பரவல் பயம்.. திட்டத்தை அதிரடியாக மாற்றிய அஜித்குமாரின் 'வலிமை' படக்குழு!
சென்னை: கொரோனா பரவல் அச்சம் காரணமாக அஜித்தின் வலிமை படக்குழு, திட்டத்தை மாற்றி உள்ளது.
அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'யை அடுத்து இதையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

ஹூமா குரேஸி
ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்தி தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

வில்லன் கார்த்திகேயா
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் வில்லனாக நடிக்கிறார். வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

அஜித்குமார் காயம்
கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். லேசான காயம் என்று கூறப்பட்டது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இறுதி படப்பிடிப்பு
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகிறார்கள். இறுதி படப்பிடிப்பையும் சில சண்டை காட்சிகளையும் சுவிட்சர்லாந்தில் படமாக்க ஏற்கனவே இயக்குனர் வினோத் முடிவு செய்து இருந்தார். அதற்கான பயண திட்டத்தையும் உருவாக்கி வைத்து இருந்தார்கள்.

கொரோனா அச்சம்
ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக அதில் மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் படக்குழு தங்கள் திட்டத்தை இப்போது மாற்றியுள்ளது.

அடுத்த மாதம்
அதாவது சுவிட்சர்லாந்தில் எடுக்க வேண்டிய காட்சியை ராஜஸ்தான் மற்றும் புதுடெல்லியில் படப்பிடிப்பை நடத்த ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. வலிமை முழு படப்பிடிப்பும் அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











