Vanangaan: இது வணங்கான் சூர்யா லுக் மாதிரி இல்லையே... அருண் விஜய்யை மாற்றிய பாலா!
சென்னை: சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணியில் தொடங்கப்பட்ட திரைப்படம் வணங்கான்.
ஆனால், திடீரென சூர்யா அதிலிருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார்.
இதனையடுத்து மீண்டும் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பாலா.
இந்நிலையில், வணங்கான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான அருண் விஜய்யின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வணங்கான் அருண் விஜய் லுக்:சூர்யாவுக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தவர் இயக்குநர் பாலா. தனது நந்தா திரைப்படம் மூலம் சூர்யாவை முன்னணி ஹீரோவாக மாற்றிய பாலா, அடுத்து பிதாமகன் படத்திலும் அவருடன் இணைந்தார். அதன்பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வணங்கான் படத்தில் சூர்யாவும் பாலாவும் இணைந்தனர். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
கன்னியாகுமரி பகுதியில் தொடங்கிய வணங்கான் படப்பிடிப்பு 40% வரை வேகமாக நடைபெற்றது. பின்னர் திடீரென சூர்யாவுக்கு இந்த கதையில் அதிருப்தி இருந்ததால், வணங்கான் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து இயக்குநர் பாலா, சூர்யா இருவருமே தனித் தனியாக அறிக்கை விட்டு விளக்கம் கொடுத்திருந்தனர். இதனால் வணங்கான் திரைப்படம் ட்ராப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சூர்யாவுக்கு தான் யார் என நிரூபிக்க வேண்டும் என மீண்டும் வணங்கான் படத்தைத் தொடங்கினார் பாலா. இந்த முறை சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய்யை ஹீரோவாக மாற்றினார். ஆரம்பத்தில் வெற்றிப் படங்கள் அமையாமல் ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த அருண் விஜய், கடந்த சில வருடங்களாக தரமான படங்களில் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். அதனால், அவரை வைத்து வணங்கான் படத்தை முடித்துவிடலாம் என பாலா பிளான் செய்தார்.
அதன்படி மீண்டும் தொடங்கப்பட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தனது படங்களில் ஹீரோ முதல் அனைத்து பாத்திரங்களையும் ரொம்பவே வித்தியாசமாக காட்டுவார் இயக்குநர் பாலா. அப்படித்தான் வணங்கான் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும் மாற்றியிருந்தார்.
ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக நடித்து வரும் அருண் விஜய்யின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வணங்கான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான இந்தப் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேநேரம் இதில் அருண் விஜய்யின் கெட்டப்பில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அதாவது வணங்கானில் நடித்து வந்த சூர்யாவின் லுக்கிற்கும், தற்போதைய அருண் விஜய்யின் லுக்கும் ரொம்பவே வித்தியாசமாக உள்ளது.
டார்க் ஆஷ் கலர் வேட்டி, சட்டையில் தலையில் மங்கி கேப் அணிந்துகொண்டு நிற்கிறார் அருண் விஜய். அவரது ஹேர் ஸ்டைலில் வித்தியாசம் இருப்பதால் மங்கி கேப் அணிந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் இது சூர்யாவின் லுக் போல மாஸ்ஸாக இல்லையென ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய் எப்படி நடித்திருப்பார் என்பதை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











