Bala: தப்பான பழக்கத்தால சாகுற நிலைமைக்கு போய்விட்டேன்.. அழுவதில் நிம்மதி.. மனம் திறந்த பாலா!
சென்னை: இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையிலும் அண்மையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் செய்திருந்தார். இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு பாலா குறித்து பேசினார்கள்.

இயக்குநர் பாலா: இந்நிலையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு இயக்குனர் பாலா பேட்டியளித்துள்ளார். அதில், தான் சினிமாவில் வந்தது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் ஒரு கட்டத்தில் என்னுடைய தவறான பழக்க வழக்கத்தினால் நிலை தடுமாறி விட்டேன். வாழ்க்கை முடிந்து விட்டது, இனிமேல் அவ்வளவுதான் என்கின்ற நிலை வந்தது. நான் மட்டுமில்லை என் சொந்தங்களும், இன்னும் ஒரு வருஷம் தான் இருப்பான், இஷ்டத்திற்கு வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று நினைத்துவிட்டார்கள்.
நான் லாயக்கு இல்லாதவன்: அந்த சூழ்நிலையில் தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்து சினிமாவிற்கு வந்தேன். ஏனென்றால், நன் வேற எந்த வேலைக்கும் லாயக்கு இல்லாதவன் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்பதால், சினிமாவை தேர்ந்தெடுத்து வந்தேன். பின் மூன்று ஆண்டுகள் போராடி பாலுமகேந்திராவிடம் பணியாற்றி இயக்குநராக மாறினேன். வேறு வழியில்லாமல் தான் சினிமாவிற்கு வந்தேனே தவிர, சினிமாவிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை.
உயிரோடு இருந்து இருக்க மாட்டேன்: எனக்கு இருந்த தவறான பழக்கத்தால், ஒரு முறை ஓவர் டோஸ் ஆகி, மருத்துவமனையில் சீரியஸான கண்டிஷனில் அனுமதிக்கப்பட்டேன். அதன் பிறகு நான் எழுந்திருக்க ஒரு வாரத்திற்கு மேலானது. அப்போதுதான் இதுக்கு மேல் இந்த பழக்கம் தேவையில்லை என்று முடிவு எடுத்து அனைத்தையும் மொத்தமாக விட்டுவிட்டேன். ஒருவேளை இந்த கெட்ட பழக்கம் எதுவுமே இல்லாமல் ஒரு சராசரி மனிதனாக நான் வாழ்ந்து இருந்தால், நான் உயிருடன் இருந்து இருக்க மாட்டேன். யாராவது என்னை கொலை செய்து இருப்பார்கள், இல்லை என்றால் இயற்கையாகவே நான் இறந்து இருப்பேன். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்து இருக்கும். இதுபோல வாழ்ந்து காட்டி இருக்க மாட்டேன். சினிமா என்னை காப்பாற்றி விட்டது என்று தான் சொல்லலாம்.
நிம்மதியாக அழுவேன்: வெளியில் இருந்து பார்க்கும் பலர் நான் மிகவும் சீரியசான ஆள் என்று சொல்வார்கள். ஆனால், நான் உண்மையில் அப்படிப்பட்டவன் இல்லை. ஒரு உருக்கமான இந்தி படத்தை பார்த்து விட்டு கதறி கதறி அழுது, கண்கள் எல்லாம் வீங்கி விட்டது. அந்த அளவுக்கு நான் மென்மையானவன். அழுவதை ஒரு சுகமாகவே நினைக்கிறேன். அழும் போது மனதும் உடலும் லேசாகி விடும். அதுவும் படத்தை பார்த்துவிட்டு அழுவதற்கு நான் எப்போதும் வெட்கமே படமாட்டேன். அழுகையை மறைக்கவும் மாட்டேன், நிறுத்தி நிதானமாக நிம்மதியாக அழுவேன் என்று அந்த பேட்டியில் இயக்குநர் பாலா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications