வனிதா விஜயகுமாருக்கும், ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம்?.. என்னது மறுபடியும் முதல்லயிருந்தா?
சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க ரபார்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவர்களுக்கு திருமணமா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

அந்தகன்: பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் வனிதா விஜயகுமார். மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்துவருகிறார்.
வனிதாவின் பேச்சு: வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். ஒரு பேட்டியின்போது லட்சுமி ராமகிருஷ்ணனை வறுத்தெடுத்துவிட்டார். அதேபோல் தனது சகோதரர் அருண் விஜய் குறித்து தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேட்டிகளில் பேசிவருகிறார். அதேசமயம் அவர் அப்படி பேசுவதுதான் அவரை அவரது குடும்பத்தினர் தள்ளி வைத்ததற்கான காரணம் என்றும் ஒரு தகவல் பரவிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வனிதாவின் திருமணம்: இது ஒருபக்கம் இருக்க; வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
திருமணமா?: இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்திருக்கிறார் வனிதா விஜயகுமார். அதில் Save The Date October 5 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ அக்டோபர் 5ஆம் தேதி என்னவாக இருக்கும். ஒருவேளை இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்று அறிவிக்கவிருக்கிறார்களா இல்லை அன்றைய தினமே திருமணம் செய்யவிருக்கிறார்களா என்று கேள்வி கேட்டுவருகிறார்கள்.
அதேசமயம் ராபர்ட்டும் வனிதாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார்கள். அந்தப் படம் பற்றிய அப்டேட் ஏதாவது அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகலாம். அதற்கான அறிவிப்பைத்தான் இப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று இன்னொரு தரப்பு ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன நடக்கவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











