ரஜினிக்கு ஹீரோயினாக வனிதா விஜயகுமாருக்கு ஆசை.. எந்தப் படத்தில் தெரியுமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே
சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். தந்தை வழியில் சினிமாவில் இயங்கும் அவர் 90களில் ஹீரோயினாக வலம் வந்தவர். விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் எல்லாம் நடித்தார். பிறகு திடீரென அவர் திருமணமாகி செட்டிலானார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை நல்லபடியாக போகவில்லை. அதிலிருந்து வெளியே வந்து சில திருமணங்கள் செய்துகொண்ட அவருக்கு அதுவும் சரியாக அமையவில்லை. இது ஒருபக்கம் இருக்க இயக்குநர் அவதாரமும் எடுத்திருந்தார் அவர்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமாருக்கும், நடிகை மஞ்சுளாவுக்கும் பிறந்தவர் வனிதா விஜயகுமார். தந்தை, தாய் வழியிலேயே சினிமாவில் நடித்த அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள். ஆனால் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன.
சர்ச்சையான பெர்சனல் வாழ்க்கை: அந்தத் திருமண முறிவுக்கு பிறகு சில வருடங்கள் சிங்கிளாக இருந்த அவர்; அடுத்தடுத்து தொடர்ச்சியாக திருமணங்கள் செய்வதும் அதிலிருந்து வெளியே வருவதுமாக இருந்தார். இதன் காரணமாக அவரது சொந்த வாழ்க்கை சர்ச்சையை சந்தித்தது. போதாக்குறைக்கு தனது குடும்பத்தினர் அனைவரையும் பகைத்துக்கொண்டார். அதுவும் பல வருடங்கள் பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சென்ற வனிதா: சண்டைகள், சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அங்கும் தனது அதிரடி நடவடிக்கைகளால் கவனத்தை ஈர்த்தவரால்; டைட்டிலை மட்டும் வெல்ல முடியவில்லை. நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட அவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான ரோலை அவர் ஏற்று நடிக்கவும் செய்தார். இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டு தாய் வழியில் அதிரடி காண்பித்தார்.
படம் இயக்கிய வனிதா: நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த அவர்; ராபர்ட் மாஸ்டரை ஹீரோவாக வைத்தும் தான் ஹீரோயினாக நடித்தும் Mrs&Mr என்ற படத்தை இயக்கினார். ஜோவிகாதான் படத்தை தயாரித்திருந்தார். எதிர்பார்த்தபடியே படம் படுதோல்வியை சந்தித்தது. தியேட்டர்களில் அடி வாங்கியது மட்டுமில்லாமல் எந்த ஓடிடியும் அந்தப் படத்தை வாங்கவில்லை. இந்தப் படத்துக்கு ரஜினியை வைத்தெல்லாம் அவர் ப்ரோமோட் செய்திருந்தார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் படையப்பா படம் பற்றி வனிதா பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், "படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நான்தான் நடிக்கவிருந்தேன். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். அதற்கு பிறகுதான் எனது தங்கைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கதை கேட்டபோது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருவேளை ஹீரோயின் ரோலில் நடிக்க அழைத்திருந்தால் நான் நடித்திருப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











