வரலட்சுமியின் முதல் காதல் சினிமா.. என் பெயருக்கு பின் அவள் பெயர்.. கலக்கலாக பேசிய நிக்கோலாய்!
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை கரம்பிடித்துள்ளார். 14 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த இவர்களின் திருமணம் ஜூலை 10ந் தேதி தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இன்று வரலட்சுமி, நிக்கோலாய், சரத்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து வைத்தனர்.
அப்போது பேசிய நிக்கோலாய், எனக்கு தமிழ் தெரியாது கூடிய விரைவில் தமிழை கற்றுக்கொள்கிறேன். மும்பை என்னுடைய வீடு கிடையாது, இனி சென்னைதான் என்னுடைய வீடு, திருமணத்திற்கு பின் வரலட்சுமி கண்டிப்பாக அவரது பேரின் நடுவில் இருக்கும் சரத்குமார் என்ற பெயரை நீக்க மாட்டார் என்பது தெரியும். அவர் வரலட்சுமி சரத்குமார் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவார். நான் அவரது பெயரை என்னுடைய பெயருடன் சேர்த்துக்கொள்கிறேன். அதன்படி, என்னுடைய பெயரில், அவரது பெயரை சேர்த்து, நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று மாற்றிக் கொள்கிறேன்.

தொடர்ந்து நடிப்பார்: சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பாராம்பரியம் அதை அவர் அப்படியே தொடரட்டும். இதனை நான் என்னுடைய மனைவிக்காக செய்கிறேன். வரலட்சுமி என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், அவரின் முதல் காதல் சினிமா தான்.... நான் இரண்டாவதுதான். நாளையில் இருந்து வழக்கம் போல ஷூட்டிங்கிற்கு செல்ல இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அவர் பிரேக் எடுத்துக்கொள்ள மாட்டார். சரத்குமார், நானும் என் மனைவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் அவர் தொடர்ந்து வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்துவார் என்றார்.
என் உயிர் சினிமா தான்: இதையடுத்து பேசிய வரலட்சுமி, என்னுடைய காதல் நிக்கோலாய் சச்தேவ்தான். ஆனாலும் என் உயிர் சினிமா என்பது அனைவருக்கும் தெரியும். பலர் கல்யாணத்திற்கு பின் நடிப்பீர்களா என்று கேட்டு இருந்தார்கள். அதற்கான பதிலை என் கணவரே சொல்லி விட்டார். நான் நிச்சயமாக தொடர்ந்து நடிப்பேன். நீங்கள் எனக்கு எப்போதும் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். எப்போதுமே என்னைப் பற்றி நல்ல விதமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன படம் செய்தாலும், அதற்கான பாராட்டை நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அது இன்னும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அன்பான மனிதர்: இதைத் தொடர்ந்து பேசிய சரத்குமார், திருமணத்திற்கு பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் அழைக்க வேண்டும் என்று நினைத்தேன் தேர்தல் இருந்ததால், அது முடியாமல் போய்விட்டது. இதனால், திருமணத்திற்கு பிறகு உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்காகத்தான் இந்த சந்திப்பு. நிக்கோலாய் ரொம்ப நல்ல மனிதர், வரலட்சுமி அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த போதே, கண்டதும் அவர் மீது காதல் வந்துவிட்டது. இறைவனால், இறை அருளால் இருவரும் சந்தித்து இன்று திருமணம் செய்து இருக்கிறார்கள். வரலட்சுமி தொடர்ந்த நடிப்பார்கள் உங்களின் அன்பு ஆதரவு அவருக்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











