முதல் பட இயக்குநரை மறக்காத வரலட்சுமி சரத்குமார்.. நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நேரில் அழைப்பு!
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை வரும் ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். திருமணத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரை சந்தித்து திருமண அழைப்பிதழை குடும்பத்துடன் சென்று கொடுத்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாவுக்கு மகளாக பிறந்த வரலட்சுமி சரத்குமாருக்கு 39 வயதாகிறது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிகோலாய் என்பவரை காதலித்து வந்த வரலட்சுமி சரத்குமார் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடந்த திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் அவரது நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி சரத்குமார் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ’போடா போடி’ படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்கி வரும் வரலட்சுமி சரத்குமார் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
முதல் பட இயக்குநர்: கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'போடா போடி’ திரைப்படத்தில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக 12 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இந்நிலையில், திருமண அழைப்பிதழை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு நேரில் சென்று வரலட்சுமி சரத்குமார் வழங்கியுள்ளார்.

சித்தி ராதிகாவுடன்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா மற்றும் ராதிகா இணைந்து நடித்திருப்பார்கள். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு திருமண அழைப்பிதழை வழங்க சித்தி ராதிகாவுடன் வரலட்சுமி சரத்குமார் சென்றுள்ளார். அங்கே நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராதிகா மற்றும் வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சித்தார்த்துக்கு அழைப்பு: மு.க. ஸ்டாலின், கனிமொழி என அரசியல் தலைவர்களுக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா என சினிமா பிரபலங்களுக்கு தொடர்ந்து திருமண அழைப்பிதழை வழங்கி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நடிகை வரலட்சுமியின் கழுத்தில் கை போட்டபடி சித்தார்த் போஸ் கொடுத்துள்ளார்.

சிம்பு மற்றும் விஷால்?: நடிகர் சிம்புவுடன் முதல் படத்தில் இணைந்து நடித்த வரலட்சுமி சரத்குமார் அவருக்கு திருமண அழைப்பிதழ் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் மகள் திருமணத்துக்கு சூப்பராக கிளம்பிச் சென்ற விஷாலுக்கும் அதே போல வரலட்சுமி சரத்குமார் திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்குவாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தடபுடல் திருமணம்: சரத்குமாரின் மூத்த மகளான வரலட்சுமி சரத்குமார் 39 வயதில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ள நிலையில், அவரது குடும்பமே ரொம்ப பெரிய குடும்பம். மேலும், சினிமா மற்றும் அரசியல் என ஏகப்பட்ட பேர் திருமணத்துக்கு வருவார்கள் என தெரிகிறது. வரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வரும் நிலையில், டோட்டல் சவுத்தே திருமண விழாவில் பங்கேற்கும் என்றும் பிரம்மாண்ட திருமணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











