For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உறவுகளைக் குதறும் பொருளாதாரம் - வரவு நல்ல உறவு!

  By Shankar
  |
  வரவு நல்ல உறவு-இந்த படம் பாத்து இருக்கீங்களா?

  - கவிஞர் மகுடேசுவரன்

  என் அத்தையார் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற மறுநாள் முதற்று அவருடைய தன்னம்பிக்கை தகர்ந்ததைப்போல் காணப்பட்டார். பற்றியிருந்த பற்றுகோல் கைநழுவிப் போனதுபோல் ஆகிவிட்டார். வாழ்வின் பற்பல நிலைமைகளில் துன்பங்களோடு தொடர்ந்து போராடி வென்றவரால் தாம் பணியோய்வு பெற்று நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓய்ந்து ஒருநாள் அமர்ந்ததில்லை. இனி மீதக்காலம் முழுமையும் வேலையின்றி அமரவேண்டும் என்றால் யார்க்குத்தான் மனம் ஒப்பும்? அந்தத் தவிப்புடனே அடுத்த பத்தாண்டுகள் ஓட்டினார். அந்தக் கவலையிலேயே உடல் நலிவுற்று இறந்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் ஓயாப்பணி. குடும்பப் பொருளாதாரத்தின் அச்சாணியாய் விளங்கியவர். ஓடிய ஓட்டத்துக்கு நிழலாய்க் கிடைத்த அந்த ஓய்வுக்காலமே அவர் உயிரைக் கொய்தது.

  Varavu Nalla Uravu - Visu's classic in 90's

  ஒரு மனிதரின் ஓய்வுக் காலத்திற்குப் பின்னான நிகழ்வுகளைத் தமிழ்ச்சூழலில் யாரேனும் திட்டமான திரைப்படமாக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்தேன். 'வரவு நல்ல உறவு' என்ற திரைப்படம் ஓய்வு பெற்ற குடும்பத் தலைவர் ஒருவர் படும்பாட்டைச் சொல்கிறது. தாம் பெற்ற பிள்ளைகளின் பேச்சில், நடவடிக்கையில், வாக்குறுதியில் ஒரு சூழ்ச்சி இருக்கும் என்று எந்தப் பெற்றோராவது எண்ணுவரா? அப்படி எண்ணாத அப்பாவியான குடும்பத் தலைவரைப் பற்றிய கதை. அப்படி எண்ணாததால் தம் இறுதிப் பற்றாகக் கிடைத்த பணிநிறைவுப் பணத்தை மனைவியின் பரிந்துரையின்படி பிள்ளைகளிடம் தோற்றுவிட்டுப் பிச்சாண்டியானவரைப் பற்றிய படம்.

  அம்பலவாணன் என்னும் பெரியவரின் பணிநிறைவு விழாவோடு படம் தொடங்குகிறது. அம்பலவாணன் தம் மனைவி காமாட்சியே உலகம் என்றிருப்பவர். காமாட்சியம்மைக்குத் தம் பிள்ளைகள் தமிழரசன், இளங்கோ, கலைச்செல்வி, வளர்மதி ஆகியோர் மீதுதான் உயிர். மரக்காணத்தில் பெரியவர் அம்பலவாணனின் கூட்டுக் குடும்பம் சிறப்பாக வாழ்கிறது. தனியார் நிறுவனப் பணியாளரான அம்பலவாணற்குப் பணிநிறைவுப் பணம் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் கிடைக்கிறது. மேற்கொண்டு திங்கள் ஓய்வூதியம் எதுவும் கிடையாது. ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்க்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது என்று பிள்ளைகள் கருதுகின்றனர்.

  Varavu Nalla Uravu - Visu's classic in 90's

  "பணத்தை ஒருவர்க்கும் தராதே, அந்தப் பணம் உன்னிடம் இருக்கும் வரையில்தான் உறவுகள் உன்னை மதிக்கும்," என்று அம்பலவாணனின் நண்பர் சந்திரசேகரன் அறிவுரைக்கிறார். தம் குடும்பத்தில் நிகழ்ந்த கொடிய நிகழ்ச்சிகளால் வெறுப்புற்ற சந்திரசேகரன் தம்முடைய பிள்ளைகளோடு எவ்வுறவையும் பேணாதிருப்பவர். தம்மிடமுள்ள வீடும் வங்கியிலுள்ள நாற்பதினாயிரம் பணமும் இல்லையென்றால் தம்மை ஒருவரும் மதிக்க மாட்டார்கள் என்பது அவருடைய அசைக்க முடியாத நிலைப்பாடு. சந்திரசேகரனின் அறிவுரைக்கு மண்டையை மண்டையை ஆட்டும் அம்பலவாணன் அதன் பொருளை விளங்கிக்கொள்ளவில்லை. பணியோய்வு நாளின் மறுநாள் தாம் படிக்கும் தினமணிக்குப் பதிலாக தினத்தந்தியைப் பார்த்ததும் வீட்டை இரண்டாக்குகிறார். மனைவி மக்களும் மருமக்களும் அவரை வேண்டி வணங்கி அமைதிப்படுத்துகிறார்கள்.

  இந்நிலையில் திருமணம் செய்து அனுப்பப்பட்ட பெண் கலைச்செல்வி தன் கணவனோடு வந்து நிற்கிறாள். தந்தையின் பணத்திலிருந்து நாற்பதாயிரம் தந்தால் தன் கணவன் சுயதொழில் தொடங்குவான், இருமடங்கு ஈட்டுவான் என்று தாயிடம் வேண்டுகிறாள். "கடனாகத் தந்தால் போதும்... சம்பாதித்ததும் திருப்பிக் கொடுத்துவிடுவார்," என்பது அவள் வாக்குறுதி. கட்டியனுப்பப்பட்ட மகள் காசு பிடுங்க மனுப்போடுவதைக் கேட்கும் மூத்த மருமகள் தன் கணவன் தமிழரசனிடம் ஏற்றி விடுகிறாள். அவர் பணத்திலிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்று கேட்கிறாள். தான் பணியாற்றும் பாண்டிச்சேரிக்கே ஒரு வீடு கட்டிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற முடிவை நாடகமாக அரங்கேற்றும் மூத்தவன், தந்தையின் பணத்திலிருந்து ஒரு இலட்சம் உரூபாய் கடனாகத் தரும்படி வேண்டுகிறான். அண்ணனும் தமக்கையும் பிடுங்கியதுபோக தனக்கு என்ன கிடைக்கும் என்று மனைவியின் சதியாலோசனையின்படி எண்ணும் இளையவன் இளங்கோ இப்போது குடியிருக்கும் வீட்டை விற்று அப்பணத்தைத் தனக்குத் தரும்படி கேட்கிறான். இவற்றுக்கு நடுவே இளைய மகள் வளர்மதி கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

  Varavu Nalla Uravu - Visu's classic in 90's

  அண்ணனும் தம்பியும் கட்டும் வீடுகளில் பெற்றோர்க்குத் தனியறை தந்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை காட்டுகிறார்கள். தங்கைக்கு நாங்கள் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோம் தெரியுமா என்று கல்லூரியில் படிக்கும் வளர்மதியின் வாழ்வுக்கும் பொறுப்பேற்கிறார்கள். "இன்று இரவு உங்க அப்பாவோடு பேசி நல்ல முடிவைச் சொல்கிறேன்," என்று பிள்ளைகளிடம் உறுதியளிக்கிறார் காமாட்சியம்மாள். "நீதான் நிதியமைச்சர். நீ பார்த்து என்ன வேண்டுமானாலும் செய். என்னிடம் நீ அன்றாடம் இரண்டு மணிநேரமாவது தனியறையில் வந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்," என்று எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொள்கிறார் அம்பலவாணன். பணம் ஆளாளுக்குத் தரப்படுகிறது. வீடு விற்கப்படுகிறது. அந்தக் குடும்பம் பிரியும் ஒரு காட்சியைக் குறியீடாய்க் காட்டுமிடத்தில் இயக்குநர் விசு மிளிர்வார். மழை நாளொன்றில் மரக்காணத்திலிருந்து திண்டிவனத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் பிரியும் இரண்டு சாலைகளில் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து செல்வார்கள்.

  சந்திரசேகரனின் மூத்த மகன் அநாதைப் பெண்ணான உமாவைத் திருமணம் செய்துகொள்வான். சந்திரசேகரன் உமாவை யாரோ ஒருத்திபோல் கருதுவார். அவள் கொடுக்கும் குளம்பிக்கும் போடும் சோற்றுக்கும் பணம் கொடுப்பார். சந்திரசேகரின் இளைய மகன் அம்பலவாணனின் மகள் வளர்மதியோடு கல்லூரியில் ஒன்றாய்ப் படிப்பவன். இருவருக்குமிடையே காதல். அநாதைப் பெண்ணான உமா பணம் பெரிதில்லை, பாசமே பெரிது என்று போராடும் பண்பினள். தம் அறிவுக் கூர்மையால் சந்திரசேகரன்மீது பாசம்பொழிந்து அவரை மனம்மாறச் செய்கிறாள்.

  Varavu Nalla Uravu - Visu's classic in 90's

  அம்பலவாணின் மக்கள் அவரிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டதும் நடவடிக்கையில் மாறுகிறார்கள். அவர்களுக்குத் தனியறை தரப்படவில்லை. அம்பலவாணனுக்குத் திங்கள்தோறும் தருவதாகச் சொன்ன ஐந்நூறு உரூபாயையும் தரவில்லை. காமாட்சியம்மையை வேலைக்காரியாய்ப் பயன்படுத்துகிறார்கள். இளங்கோ வீட்டில் மனைவியின் தாய் தந்தையர் வந்து தங்கிக்கொள்கிறார்கள். வளர்மதிக்கு இரண்டாம் தாராமாய் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அம்பலவாணன் கையில் பத்துப்பைசா கூட இல்லை. இவையனைத்தையும் பொறுக்க முடியாத அம்பலவாணன் மனைவியையும் வளர்மதியையும் அழைத்துக்கொண்டு ஒரு நள்ளிரவில் மரக்காணத்திற்கு வந்து சந்திரசேகரனின் கதவைத் தட்டுகிறார்கள். அவர்களை எதிர்கொள்ளும் சந்திரசேகர், "நீங்க ஒன்னும் சொல்ல வேண்டா. எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு... முதல்ல சாப்பிடுங்க," என்று வரவேற்கிறார். அம்பலவாணன் தங்குவதற்கு ஊரெல்லையில் ஒரு குடிலை ஏற்பாடு செய்து தருகிறார்.

  வளர்மதி தன் காதலனைத் திருமணம் செய்துகொள்கிறாள். "அவனுடைய காதலை ஏற்றுக் கட்டிக்கொள்ளாவிட்டால் தன் வாழ்க்கைக்குரிய கடைசி வாய்ப்பும் போய்விடும்," என்பது அவள்கூறும் நியாயம். அம்பலவாணன், "எங்கேயாவது போய் நல்லா இருந்துக்கோம்மா," என்று வாழ்த்தியனுப்புகிறார். தம் மக்கள்மீது வழக்கு தொடுக்கும் முனைப்பில் அம்பலவாணன் இருக்கும்போது, பிள்ளைகள் மீண்டும் தேடிவந்து அம்மாவிடம் முறையிடுகின்றனர். நாங்கள் நீதிமன்றத்தின் படியேறினால் அன்றே தூக்கிலிட்டுக்கொள்வோம் என்று மிரட்டுகிறார்கள். காமாட்சியம்மாள் அவர்களுக்காக அம்பலவாணனிடம் மீண்டும் பரிந்து பேசுகிறாள். ஏதும் சொல்லாமல் செல்லும் அம்பலவாணன் வழக்கு தொடுக்காமல் வந்து நிற்கும்போது காமாட்சியம்மாள் அரளிவிதையை அரைத்துத் தின்று இறந்து கிடக்கிறாள். "இதோ இறந்து கிடப்பவள் என் மனைவியல்ல... சில பிள்ளைகளின் அம்மா," என்று அவளை வெறுத்து வேலை தேடிச் செல்கிறார் அம்பலவாணன்.

  குடும்பம், சமூகம், அரசாங்கம் ஆகிய அனைத்துமே பொருளாதாரத்தின்மீது கட்டப்பட்டவை என்பார்கள். அவற்றில் குடும்பம் மட்டுமே இரத்த உறவுகளின் பட்டுக்கயிற்றால் மேலும் இறுக்கமாய்க் கட்டப்பட்டிருப்பது. தாய் தந்தையர்க்கு இடையிலேகூட பணம் என்னும் ஒரு சாத்தான் இடைநுழைந்தால் பாசவுணர்ச்சிகள் இயற்கையை மீறிய திரிபுகளை அடைகின்றன. முற்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் போரில் ஈடுபடவேண்டும். அனைத்தையும் அடைவதற்கான அதிகாரத்தின் குறியீடுதான் பணம். அடிப்படைத் தேவையை அடைவதற்கும் அதே பணம்தான் ஒரே திறவுகோல்.

  'வரவு நல்ல உறவு' திரைப்படத்தில் இந்தப் பேருண்மையை ஒரு குடும்பக் கதையாடல் மூலம் விசு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். பணம் என்று வந்துவிட்டால் தாய் தந்தையரைக்கூட நைச்சியமாய்க் குத்திக்கொல்லத் தயங்காத கொடிய விலங்குபோல் மனிதன் மாறுகின்றான். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் கருச்சுமந்த தாயொருத்திதான், எதையும் கருதாத தாய்மைப் பண்புதான், மாசுபடாத இறுதி நம்பிக்கையாக இருப்பதையும் அப்படம் நிறுவுகிறது. விசு எடுத்த பற்பல படங்களில் 'வரவு நல்ல உறவு'தான் தாளமுடியாத அதிர்வுகளைப் பார்வைகளிடத்தில் ஏற்படுத்தியது. இன்றைக்குப் பார்த்தாலும் அதே அதிர்வுகளை உணர முடியும்.

  Read more about: movie visu விசு
  English summary
  Poet Magudeswaran's analysis on Visu's 90's classic Varavu Nalla Uravu.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more