Bad Girl: பத்தினி பெண்ணுக்கு மட்டுமா? ரிலீஸ் ஆகாத படத்தின் மீது ஏன் விமர்சனம்? இது யாருடைய பதற்றம்?
சென்னை: இயக்குநர் வெற்றி மாறனின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பரத் பேட் கேர்ள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகின்றார். இந்தப் படத்தினை வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கியுள்ளனர். படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரத்தில் நடைபெற்றது. டீசர் வெளியானதில் இருந்து இப்போதுவரை இணையத்தில் தொடர் சர்ச்சைகளாகவே உள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
பேட் கேர்ள் படத்தின் இயக்குநர் வர்ஷா பரத் டீசர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, பெண் என்றால் பூ, பெண் என்றால் பத்தினி, தெய்வம் எனக் கூறிக் கூறியே பெண்களை இப்படியான நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால், பெண் என்றால் அது மட்டும் இல்லை என நான் கூறுவேன். மேலும் இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரத்தை சரி தவறு என நான் நிலைப்படுத்த விரும்பவில்லை. மையக் கதாபாத்திரம் தனது வாழ்க்கையை வாழ்கின்றது. அதுதான் படம். அந்தக் கதாபாத்திரத்திற்கு சில மனநலப் பிரச்னைகள் உள்ளது. அதற்கு மத்தியில் தான் எடுக்கும் சில "தவறான முடிவுகளால்" தனது வாழ்க்கையில் என்னவெல்லாம் எதிர் கொள்கின்றார். என்னவெல்லாம் கற்றுக் கொள்கின்றார் என்பதுதான் கதை.

இந்தக் கதாபாத்திரத்தை யாரும் ரோல் மாடலாக அதாவது முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் இதைவிட மோசமான ஆண்களை கதாநாயகனாகவும் அவன் செய்வதை சரியெனச் சொல்லும் படங்களையும், அதனை ஏற்றுக்கொண்டவர்களையும் நான் பார்த்துள்ளேன். அந்த வகையில் இந்தப் படத்தினையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகின்றேன் எனப் பேசினார்.
அபத்தம்: டீசர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீது கண்மூடித்தனமான, முறையற்ற விமர்சனங்கள் எல்லாம் வைக்கப்பட்டு வருகின்றது. அதிலும் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர் மோகன் ஜி, வெற்றி மாறன், அனுராக், பா.ரஞ்சித் உள்ளிட்டோரை நோக்கி, உங்கள் வீட்டில் உள்ள பெண்களை இப்படி காட்சிப் படுத்தவேண்டியதுதானே, எதற்காக பிராமணப் பெண்களை இவ்வாறு காட்சிப்படுத்துகின்றீர்கள் என அபத்தமான கேள்வியை எழுப்பினார். இவரைப்போல் நடிகை கஸ்தூரி தொடங்கி பல இணையவாசிகளும் படக்குழுவினரை விமர்சித்து வருகின்றனர்.

உதாரணம்: முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் வெற்றி மாறன் இல்லை. அவர் தயாரிப்பாளர் மட்டுமே. அதேபோல் படத்தினை இயக்கியது ஒரு பெண் இயக்குநர். அவர் தனது உரையிலேயே, இதைவிட மோசமான ஆண்களை கதாநாயகனாகக் கொண்ட படங்கள் வந்து, அதனை மக்கள் கொண்டாடியுள்ளார்கள். அந்தக் கதாபாத்திரங்களை நியாயப்படுத்தியுள்ளனர். வர்ஷாவின் இந்தக் கருத்துக்கு பல படங்களை உதாரணமாகக் காட்ட முடியும். அது மோகன் ஜிக்கே தெரியுமா இல்லை அவருக்கு தெரியாதா என்பது குறித்து அவருக்குத்தான் வெளிச்சம்.

உரையாடல்: படத்தினை இயக்கிய வர்ஷா, தனது படத்தின் மூலம் ஏதோ ஒரு கருத்தினைச் சொல்ல வருகின்றார். படம் என்ன சொல்ல வருகின்றது. படத்தின் மூலம் அவர் என்ன மாதிரியான உரையாடலை உண்டாக்க நினைக்கின்றார் என்ற கோணத்தில் கொஞ்சமும் யோசிக்காமல், ஏதோ இருட்டுத் தியேட்டருக்குள் மோசமான கமெண்ட் அடிக்கும் புரிதலற்ற ரசிகரைப் போல, மோகன் ஜி தனது விமர்சனங்களை முன்வைப்பதைப் பார்க்கும்போது ஒரு பதற்றம் உருவாகியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

பதற்றம்: பேட் கேர்ள் இயக்குநருக்கு வாழ்த்துகள் ஒரு பக்கம் குவிந்து வருகின்றது. காரணம், மோகன் ஜி போன்றோர் பதற்றமடைகின்றார்கள் என்றால், படம் தான் பேச நினைத்ததை பேசியுள்ளது. யாருக்கு உரைக்க வேண்டுமோ அவர்களுக்கு உரைத்துள்ளது. இது போன்ற படங்கள் வணிக நோக்கத்திற்காக எடுக்கப்படுபவை இல்லை என்றாலும், வரும் காலங்களில் இது போன்ற படங்களும் பெரும் வணிக வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தின் டீசருக்கே இந்த அளவுக்கு பதற்றம் ஏற்படுகின்றது என்றால், படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினைப் பார்த்துவிட்டு மோகன் ஜி போன்றோர் என்ன செய்வார்களோ என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











