twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல கலைஞர்களைக் கொண்டாட மறுக்கிறதே இந்த சமூகம்!- இயக்குநர் வசந்தபாலன் வேதனை

    By Shankar
    |

    சென்னை: நல்ல கலைஞர்கள் நாட்டின் சொத்து. அவர்களைக் கொண்டாட வேண்டும். ஆனால் இந்த சமூகம் கொண்டாட மறுக்கிறதே இந்த சமூகம் என்று வேதனைப்பட்டார் இயக்குநர் வசந்தபாலன்.

    லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள 'பகிரி' என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார், பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

    படம் பற்றி இப்படத்தை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசும் போது, "ஒரு காலத்தில் செருப்பு தைக்கிற தொழிலை கேவலமாக நினைத்தார்கள். சிலர்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இன்று ஆதிக்க சாதி, ஆண்ட சாதி எல்லாரும் அந்த தொழிலைச் செய்கிறார்கள். காரணம் பணம்.

    Vasanthabalan slams PM Modi

    ஆனால் விவசாயம் செய்ய யாரும் முன்வருவது இல்லை. காரணம் வருமானமில்லை. கவனிப்பாரில்லை. விவசாயிகள் 'இந்தப் பிழைப்பு எங்களோடு போகட்டும் நீ போய் வேறு பிழைப்பு பார் ' என்று தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்பி விடுகிறார்கள். விவசாயம் செய்வது கேவலமாகப் பார்க்கப் படுகிறது.

    தன் மகன் விவசாயி ஆக நினைத்து வளர்க்கிறார். மகனும் விவசாயி ஆக ஆசைப்படுகிறான். ஆனால் ஒருவன் என்னவாக வேண்டும் என்பது அவன் நினைத்தால் மட்டும் போதுமா? அவன் என்னவாக வேண்டும் என்று சமுதாயமும் நினைக்க வேண்டுமல்லவா? ஒருவன் என்னவாக வேண்டும் என்கிற அந்தப் போராட்டமே 'பகிரி' படம்.

    இப்படத்துக்கு ஆதிமுதல் அந்தம் வரை உறுதுணையாக இருந்தவர் செழியன் அவர்கள். அவர்தான் எனக்கு இப்படத்துக்கு நாயகன், ஒளிப்பதிவாளர் எல்லாரையும் கொடுத்து உதவினார் அவர் தந்த அங்கீகாரமே படத்துக்குப் பெரிய வெற்றி," என்றார்.

    வசந்த பாலன்

    விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசும் போது குமுறித் தீர்த்துவிட்டார். அவர் பேசும்போது, "என்னை இந்த விழாவிற்கு அழைத்தபோது, 'பகிரி' என்கிற இந்த தலைப்பே பிடித்திருந்தது. அதற்காகத்தான் வந்தேன். இன்று தமிழை அதன் வளத்தை அறியாமல் தட்டையாகப் பயன்படுத்தி வருகிறோம். இரண்டே பக்கம் உள்ள நாணயத்தைப் போல தட்டையானதாக பயன்படுத்தி வருகிறோம். ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் மாற்றுச் சொல் தேடாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.

    சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் இன்று மறைந்து கொண்டிருக்கின்றன. அவற்றை யெல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்று நினைத்துதான் கம்ப்யூட்டர் கணிப்பொறி ஆனது. கணினி என்று அழகாக மாறியது.

    நான் 'அங்காடித் தெரு' என்று தலைப்பு வைத்த போது பலருக்கும் புரியவில்லை. சிலர் அங்கன் வாடியா என்று கேட்டார்கள். ஆனால் அது சட்ட சபையிலேயே பேசப்பட்டது. பாண்டிபஜார் என்பது சௌந்தர பாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றும் அளவுக்குப் போனது.

    அப்படித்தான் நான் 'வெயில் ' என்று தலைப்பு வைத்தபோதும் புரியவில்லை. தயாரிப்பாளர் ஷங்கர் சாரே 'வெயில்' எல்லாரையும் போய்ச் சேருமா என்றார்.

    ஒரு கலைஞன் சமூகத்துக்கு புதிய புதிய சொற்களைத் தர விரும்புகிறான். அதை ஏற்றுக் கொண்டால் தினச் சொல்லாக புழங்கும் சொல்லாடலாக மாறும். அந்த வகையில் இந்தப் 'பகிரி' மாறும்.

    படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். படம் விவசாயம் பற்றிப் பேசுகிறது. ஓர் இயக்குநருக்கு எந்த அளவுக்கு கேளிக்கையூட்டும் பொறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும் செய்ய வேண்டும் என்கிற சமூகப் பொறுப்பும் இருக்கவேண்டியது முக்கியம்.

    விவசாயம் என்பது ஒரு சாதி. அது இன்று அழிந்து வருகிறது.

    நேரு சுதந்திர இந்தியாவை என்று விவசாய நாடாக ஆக்குவதற்குப் பதிலாக தொழிற்சாலையாக மாற்ற நினைத்தாரோ அன்றே விவசாயம் இறந்துவிட்டது.

    கோ கோ கோலா ஒரு லிட்டர் தயாரிக்க 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. என்ன கண்டு பிடித்தாலும் தண்ணீரை யாரும் கண்டுபிடிக்க முடியாது. 'ஹெச் 2ஓ ' வை யாரும் உருவாக்க முடியாது.

    விவசாய நிலங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களாகின்றன. விவசாய நிலம் விற்று வெளிநாட்டு வேலைக்குப் போய்க் கொண்டு இருக்கிற சூழல். சீமான் தேர்தல் அறிக்கையில் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. விவசாயத்தை மீட்டெடுக்கத்தான் வேண்டும்.

    காரை இறக்குமதி செய்யலாம். அரிசியை இறக்குமதி செய்யலாமா?

    இது பற்றி எல்லாம் சினிமாவில் சொல்வது தாக்கம் ஏற்படுத்தும். இந்த 'பகிரி' சமூக நோக்கோடு வரும் எளிமையான படம்.

    இப்போது மராத்தி, கன்னடத்தில் எல்லாம் நல்ல படங்கள் வருகின்றன. வசூலை அள்ளுகின்றன. எளிமையான கதை, எளிமையான மனிதர்களிள் வாழ்க்கை என்றும் வெற்றி பெறும். கன்னடத்தில் 'திதி' என்று 24 வயது இளைஞன் எடுத்த படம் வியப்பூட்டுகிறது.

    இங்கே சமூக நோக்கோடு வரும் படங்கள் எப்போதாவது தான் வருகின்றன. 'காக்கா முட்டை' க்குப் பிறகு எதுவும் வரவில்லை. எல்லாமே கூமுட்டைகளாகவே இருக்கின்றன.

    விவசாயத்தைப் போலவே தமிழ்ச் சினிமாவும் நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. பத்து கதாநாயகர்கள் படங்கள் தவிர எதுவும் ஓடுவதில்லை. இந்த நல்ல படம் ஓட வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.

    நல்ல கலைஞர்கள் நாட்டின் சொத்து. அவர்களைக் கொண்டாட வேண்டும். ஆனால் இந்த சமூகம் கொண்டாட மறுக்கிறது. அசோகமித்ரனைக் கொண்டாட மறுக்கிறது ; ருத்ரய்யாவைக் கொண்டாட மறுக்கிறது. ருத்ரய்யா இறந்தது யாருக்குமே தெரியவில்லை.

    சேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது. கமர்ஷியல் படமெடுத்து காசு பண்ண நினைக்காமல் நல்ல படம் எடுக்கும் கனவுடன் கிளம்பி வந்தோம். இன்று அந்தக் கனவு நொறுங்கி கொண்டிருக்கிறது," என்று குமுறியவர் 'பகிரி' குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    English summary
    Director Vasanthabalan slams PM Modi for his wrong foreign direct investment policy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X