ஜோஸ்வா படத்தில் இவர் தான் வில்லன்... ட்விட்டரில் அறிமுகம் செய்தார் கௌதம் வாசுதேவ் மேனன் !
சென்னை : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ஜோஸ்வா இமை போல் காக்க. இளம் நடிகர் வருண் நடித்து வரும் இந்த திரைப்படம் அதிரடி சண்டை காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்திற்கான டீசர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் பாடலொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கையோடு இந்த படத்தின் வில்லன் இவர்தான் என அறிமுகம் செய்துவைத்து பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை கவர்ந்து
தமிழ் சினிமாவில் பல்வேறு காதல் திரைப்படங்கள் வந்தாலும் கௌதம் வாசுதேவ் மேனனின் காதல் திரைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இவ்வாறு இவர் இயக்கி வரும் பல படங்கள் இன்றளவும் பல இளைஞர்களை கவர்ந்து விருப்ப படமாக இருந்து வருகிறது.

இரண்டு மாஸான டிரெய்லரை
சியான் விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவநட்சத்திரம் திரைப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசாக தயாராக இருக்கும் நிலையில் இதுவரை இரண்டு வெவ்வேறு மாஸான டிரெய்லரை வெளியிட்டு அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்கு கூட்டியிருக்கிறார்.

சீறும் வில்லனாக நடித்து
இளம் நடிகர் வருண் நடிக்கும் ஜோஸ்வா இமை போல் காக்க என்ற புதிய படத்தையும் தொடங்கி தற்பொழுது வெளியீட்டுக்காக தயாராக உள்ளது. தலைவா, கோமாளி, ஒரு நாள் இரவு, சில சமயங்களில் உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த வருன், ஜீவா நடிப்பில் வெளியான சீறு திரைப்படத்தில் சீறும் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி வந்தார்.

கௌதம் மேனன் இயக்கத்தில்
இவ்வாறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த வருண் சமீபத்தில் வெளியான "பப்பி" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா திரைப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி தற்பொழுது இத்திரைப்படம் முற்றிலும் தயாராகி வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

நான் உன் ஜோஸ்வா
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பான சண்டை காட்சிகளுடன் ஆழமான காதலை சொல்லும் விதமாக அமைந்த இந்த ஜோஸ்வா இமை போல் காக்க டீசர் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோஸ்வா படத்தில் வரும் "நான் உன் ஜோஸ்வா" என்ற பாடலை வெளியிட்ட கையோடு இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகரை பற்றியும் முதன்முறையாக தெரிவித்திருக்கிறார்.

வில்லனை அறிமுகம்
ஜோஷ்வா வில்லன் யாமிருக்க பயமே, பண்டிகை, கழுகு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அனைவரும் அறியப்படும் நடிகராகவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் சகோதரருமான கிருஷ்ணா தமிழ் திரைத்துறையில் பலராலும் அறியப்பட்ட நடிகராக வலம் வருகிறார். கௌதம் மேனன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது" ஜோஷ்வா படத்தின் வில்லனை அறிமுகம் செய்யும் நேரம் வந்துவிட்டது, நடிகர் கிருஷ்ணா "ஜோஸ்வா இமை போல் காக்க" படத்தில் வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு மிக்க நன்றி கிருஷ்ணா, இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நீங்கள் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள் பிரதர். இவ்வாறு கௌதம் மேனன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

திருப்புமுனையாக அமையும்
இதுவரை கதாநாயகனாகவும் துணை கதாநாயகனாகவும் நடித்து தனக்கென ஒரு நிலையான அங்கீகாரத்தை தேடிக்கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு இந்தப் படம் மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்து திருப்புமுனையாக அமையும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











