Thangalaan: தங்கலானை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தங்கலான். ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்தது. படம் ரிலீஸுக்கு முன்னரும் அதன் பின்பும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. குறிப்பாக அரசியல் களத்தில் உள்ள தலைவர்கள் தங்கலான் படத்தினை பாராட்டி வருகின்றனர். அவ்வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான சிந்தனைச் செல்வன் தங்கலான் படத்தைப் பாராட்டியுள்ளார். அது குறித்து காணலாம்.
தங்கலான் படம் கோலார் தங்கவயலில் இருந்து தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு முயற்சி செய்தனர். கோலார் தங்கவயலில் இருந்து தங்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு எவ்வாறு எடுத்தார்கள் என்பதை மாய- எதார்த்த கதையை மைய்யப்படுத்தி கூறியிருப்பார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் உலகத்தரத்தில் உள்ளது என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தினைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் படம் குறித்த தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், " படம் பார்த்தேன். மிக மிக சிறப்பு. சனாதன மதிப்பீடுகளில் புதைந்து கிடந்த நிலவுடமை சமூக கட்டமைப்பில் பூர்வகுடிகளின் நிலம் எவ்வாறு அவர்களிடமிருந்து வன்முறையாலும் வஞ்சகத்தாலும் பறிக்கப்பட்டது என்பதை மிகத்துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். நடிகர் விக்ரமின் நடிப்பு உலக தரத்தை விஞ்சுகிறது.
மஞ்சள் பேய்: இயற்கையோடு இணைந்தவாழ்வு, அதன் சம நிலையை பேணிக்காப்பதே தொல்தமிழர் வாழ்வியல் கோட்பாடு என ஆரத்தியின் மூலம் வலியுறுத்தப்படும் அறம் மிக மிக நுட்பமானது. மின்னும் தங்கம் ஒரு மஞ்சள் பேய் என அறைந்து சொல்கிறது படம். காலனியாதிக்கத்தின் வரவு நம் வர்க்க ஒடுக்குமுறையின் வடிவத்தை சற்று மாற்றியதே தவிர சுரண்டலும் ஒடுக்குமுறையும் மாறவில்லை என்பதை காத்திரமாய் சொல்லும் இந்த திரைகாவியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என படத்தினைப் பாராட்டியுள்ளார்.
திருமுருகன் காந்தி: அதேபோல் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தியும் படத்தை பாராடியுள்ளார். அதில், " தங்கலான்' திரைப்படத்தை சிறப்பாக படைத்திருக்கிறார் தோழர் பா.ரஞ்சித். பல கதையடுக்களை கொண்டு சமூக வரலாற்றின் பல பக்கங்களை திறந்திருக்கிறார். பழங்குடிகள், பஞ்சமர்கள், ஆண்டான்-அடிமை உழைப்பு சுரண்டல், ஜமீந்தார்-காலனிய வரி சுரண்டல், சாதிய சுரண்டல், பெளத்தம், சனாதனம், தீண்டாமை, ராமானுஜரின் வைணவம் என களம் அமைத்து, நில உடமையில் அடிமைத்தனமும், முதலாளியம் உருவாக்கும் போலியான சுதந்திரம், காலனியத்தின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு, நில உற்பத்தியில் விளைபொருளை கூலியாக கொடுப்பது என்பதிலிருந்து தொழிலில் காசு-பணம்-தங்கம் கூலியாக கொடுப்பது எனும் மாற்றம் ஆகியவற்றை படிப்படியாக விவரிக்கிறது படைப்பு.
பெளத்த-பார்ப்பனிய மோதல்: தங்கம் எனும் மஞ்சள் பேய் அரச படையெடுப்பிலிருந்து, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வரை அழைத்து வருகிறது. பழங்குடிகள், பூர்வகுடிகளின் இயற்கை சொத்துக்கள் மீதான ஆதிக்க வேட்டையில் உழைக்கும் மக்கள் யாருடன் அணிசேர்கிறார்கள் என சொல்கிறது திரைப்படம். சமூக விடுதலை, சுரண்டலிலிருந்து விடுதலை, முதலாளியத்திலிருந்து விடுதலை, பெண்கள் விடுதலை என கதாநாயகனின் பயணம் நீள்கிறது. கதை சொல்லுகின்ற போக்கும், காட்சி அனுபவமும் புதுமையாக இருக்கிறது. நடிகர்கள் விக்ரம், பார்வதி, பசுபதி வேறு உலகத்தை படைக்கிறார்கள். நுணுக்கமான காட்சியமைவுகள், பெளத்த-பார்ப்பனிய மோதல் தொன்மத்தை காட்சிப்படுத்தியது, இந்த முரண்களுக்கு முந்தைய நாகர் பழங்குடி, நாட்டார் தெய்வ படிமம் ஆகியவற்றை திரைப்படம் முழுவதும் கையாண்டிருக்கிறார். கோலார் தங்கவயலில் விதைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறை நுட்பமான காட்சியமைப்புகளுடன் அமைந்திருக்கிறது 'தங்கலான்'.
பள்ளிகால நண்பன்: நாங்கள் பார்த்த திரையரங்கில் ஒலியமைப்பு முறையாக இருந்திருந்தால் இசையை- வசனங்களை கூடுதலாக கவனித்திருக்கலாம். என்னுடைய பள்ளிக்கால வகுப்பு நண்பன் இந்திரஜித் முக்கிய கதாபாத்திரத்தில் அரசனாக நடித்திருப்பதை பார்த்தது பெரும் மகிழ்ச்சி. அவனது 30 ஆண்டுகால போராட்டத்தில் வென்றிருக்கிறான். மிகச்சிறப்பான கலை இயக்கத்தை -(art direction) காணமுடியும். நல்ல காட்சியனுபவத்தை, கதைக்களனை, அரசியலை, படைப்பை கடுமையான உழைப்பில் உருவாக்கியிருக்கிறீர்கள். 'தங்கலான்' பெருவெற்றியடைய வாழ்த்துகள் இயக்குனர் தோழர்.பா.ரஞ்சித்" என பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











