தங்கலான் படத்தை பார்த்த திருமாவளவன்.. பா.ரஞ்சித்தை பாராட்டி புகழாரம்.. புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி!
பெங்களூரூ: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
படத்தின் வெற்றியை படக்குழு கோலாகலாமாக கொண்டாடி வருகின்றது. ஏற்னவே தங்கலான் படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த தங்கலான் படம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் படம் பார்த்து பாராட்டினர். இந்நிலையில் படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதேநேரத்தில் படம் ஹிந்தியில் ரிலீஸ் ஆகி அங்கேயும் நல்ல வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான சிந்தனைச் செல்வன் தங்கலான் படத்தைப் பாராட்டியுள்ளார். அது குறித்து காணலாம்.

தங்கலான் படம் கோலார் தங்கவயலில் இருந்து தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு முயற்சி செய்தனர். கோலார் தங்கவயலில் இருந்து தங்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு எவ்வாறு எடுத்தார்கள் என்பதை மாய- எதார்த்த கதையை மைய்யப்படுத்தி கூறியுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் உலகத்தரத்தில் உள்ளது என பாராட்டினர்.
இந்நிலையில் படத்தினைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் படத்தை பாராட்டியது மட்டும் இல்லாமல், படத்தில் நடித்த நடிகர்கள் இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டினார். பெங்களூரில் உள்ள பிரபல திரையரங்கில் படம் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திருமாவளவன்: அப்போது அவர் பேசியதாவது, " தங்கலான் படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகின்றது. ஜாதி, வர்ணம் போன்றவற்றால் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை, அங்கிருந்து விடுவித்துவந்து, கோலார் பகுதியில் புதைந்து கிடக்கும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியை தங்கலான் தலைமை தாங்கி மேற்கொள்கின்றார். அதில் இந்த மக்கள் படும் அவலங்களை வெளிப்படுத்தும் படமாக தங்கலான் உள்ளது. மிகவும் கடுமையான உழைப்பினை அவர்கள், அந்தக் காலத்தில் மேற்கொண்டார்கள் என்பதை இந்தப் படத்தில் இருந்து உணர முடிகின்றது. ஒருபுறம் நிலக்கிழார்கள் செய்கின்ற கொடுமை, மற்றொருபுறம் பிரிட்டிஷார் செய்கின்ற அடக்குமுறை போன்றவற்றைக் கடந்து, குறிப்பாக வேலூர் மாவட்ட மக்கள், கோலார் தங்கவயலில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியைச் செய்கின்றார்கள். இயக்குநர் பா. ரஞ்சித் தனக்கே உரிய பாணியில் படத்தை எடுத்துள்ளார்" என பேசியுள்ளார்.

புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி: இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தங்கலானுக்கு பின்னர் ரிலீஸ் ஆன வாழை படத்தினைப் பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டியது மட்டும் இல்லாமல், அங்கு மதிய உணவும் சாப்பிட்டார். இப்படி இருக்கும்போது, அரசியல் தளத்தில் பாராட்டுகளைப் பெற்ற தங்கலான் படம் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவிக்காமல் இருந்தது குறித்து புகைச்சல் கிளம்பியது. குறிப்பாக படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவேந்தல் பேரணி நடத்தியதில் திருமாவளவனுக்கும் ரஞ்சித்திற்கும் இடையில் பிரச்னை என பேச்சுகள் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தங்கலான் படத்தைப் பார்த்து, படக்குழுவினரை திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
சிந்தனைச் செல்வன்: இதற்கு முன்னர் படம் வெளியாகி சில தினங்களில் படத்தினைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் படம் குறித்த தனது விமர்சனத்தை தெரிவித்திருந்தார். அதில், " படம் பார்த்தேன். மிக மிக சிறப்பு. சனாதன மதிப்பீடுகளில் புதைந்து கிடந்த நிலவுடமை சமூக கட்டமைப்பில் பூர்வகுடிகளின் நிலம் எவ்வாறு அவர்களிடமிருந்து வன்முறையாலும் வஞ்சகத்தாலும் பறிக்கப்பட்டது என்பதை மிகத்துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். நடிகர் விக்ரமின் நடிப்பு உலக தரத்தை விஞ்சுகிறது.

மஞ்சள் பேய்: இயற்கையோடு இணைந்த வாழ்வு, அதன் சம நிலையை பேணிக்காப்பதே தொல்தமிழர் வாழ்வியல் கோட்பாடு என ஆரத்தியின் மூலம் வலியுறுத்தப்படும் அறம் மிக மிக நுட்பமானது. மின்னும் தங்கம் ஒரு மஞ்சள் பேய் என அறைந்து சொல்கிறது படம். காலனியாதிக்கத்தின் வரவு நம் வர்க்க ஒடுக்குமுறையின் வடிவத்தை சற்று மாற்றியதே தவிர சுரண்டலும் ஒடுக்குமுறையும் மாறவில்லை என்பதை காத்திரமாய் சொல்லும் இந்த திரைகாவியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என படத்தினைப் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











