இளையராஜாவை சந்தித்த வேடன்.. இவரு என்னங்க புதுசா ஒரு பட்டம் கொடுத்திருக்காரு
சென்னை: ராப் பாடகர் வேடன் குறித்து மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பலரும் அறிந்ததே. ராப் பாடகளை மேடைகளில் மட்டும் பாடுவது இல்லாமல், சினிமாக்களிலும் பாடுகிறார். அதேபோல் சினிமா பாடல்களையும் பாடிக் கொடுக்கிறார் வேடன். தீபாவளிக்கு வெளியான பைசன் படத்தில் ரெக்க ரெக்க என்ற பாடலை பாடி இருந்தார் வேடன். இந்நிலையில் அவர் இன்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இசை அரக்கன் என்று கேப்ஷன் இட்டுள்ளார்.
மலையாளி அப்பா, இலங்கைத் தமிழ் அம்மா தம்பதியருக்கு பிறந்தவர் வேடன். இவரது இயற்பெயர் ஹிரந்தாஸ் முரளி. சமூகத்தில் நடைபெறும் அவலங்களை தனது பாடல்கள் மூலம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருபவராக உள்ளார். தனது பெயரை வேடன் என்று அவரே மாற்றி வைத்துக் கொண்டார். இவருக்கு மலையாளத்திலும் தமிழிலும் ரசிகர்கள் ஏராளம்.
இவரால் மலையாளத்திலும் தமிழிலும் பாட முடிகிறது என்பதால், அவர் இரண்டு மாநிலங்களிலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தனது நெஞ்சில் தமிழின் முதல் எழுத்தான அ என்ற உயிர் எழுத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார். தமிழ் குறித்து பேசும்போது எல்லாம், தமிழ் தாய் என்றே குறிப்பிட்டு வருகிறார். தனது கோபத்திற்கு வார்த்தை வடிவம் கொடுத்து அவற்றை பாடலாக மாற்றுவதில் வேடன் திறமையானவர்.

இசைஞானி: இப்படி இருக்கும்போது வேடன் சென்னைக்கு வந்துள்ளார். இவர், இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர்களில் ஒருவர். இதனால் இசைஞானியை அவரது அலுவலகத்திற்குச் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரைப் பார்த்து பேசி வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், அதற்கு இசை அரக்கன் என்று பெயர் சூட்டி உள்ளார்.
மார்கழியில் மக்களிசை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 5ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சியில் வேடன் கலந்து கொண்டு பாட வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கி, நாளை மற்றும் நாளை மறுநாள் என மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேடன் சென்னைக்கு வந்துள்ள தகவல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











