வீர தீர சூரன் படம் இன்று மாலை ரிலீஸ்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. இயக்குநர் அருண்குமார் வேதனை
சென்னை: ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் போது அந்த படம் வெளியாக முடியாமல் போனால் அந்த இயக்குநருக்கு எந்தளவுக்கு மனவேதனை ஏற்படும் என்பதை ரசிகர்கள் நிச்சயம் அறிவார்கள். அதே நேரம் சியான் விக்ரம் ரசிகர்கள் காலை முதலே படத்தை பார்க்க தியேட்டர் வாசல்களில் காத்துக் கிடந்து படம் 4 வாரங்களுக்கு வெளியாகாது போன்ற அதிர்ச்சி செய்திகளை கேட்டு அப்செட் ஆன நிலையில், இன்றே படத்தை வெளியிட அனைத்து வேலைகளையும் படக்குழு செய்துள்ளது.
வீர தீர சூரன் படம் இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என படத்தின் இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சியான் விக்ரம் ரசிகர்கள் இந்த படமும் துருவ நட்சத்திரம் படம் போல ஆகிவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், காளியின் ருத்ர தாண்டவத்தை ரசிகர்கள் இன்று மாலை முதல் திரையரங்குகளில் கண்டு ரசிக்கப் போகின்றனர்.
வீர தீர சூரன் ரிலீஸில் என்ன பிரச்சனை?: வீர தீர சூரன் படத்தை வெளியிடக் கூடாது என B4U நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் அதன் விசாரணை மீண்டும் தொடங்கியது. தயாரிப்பாளர் ஷிபு நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தார். இருதப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மூன்று நாட்களுக்கு சேட்டிலைட் உரிம ஆவணங்கள் வழங்கப்படும் என்றும் 2.5 கோடி ரூபாயை ஒப்பந்த அடிப்படையில் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். இரு தரப்பும் எழுத்துப்பூர்வ பிராமண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து படத்தின் ரிலீஸுக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மன்னிப்பு கேட்ட இயக்குநர்: வீர தீர சூரன் 2ம் பாகத்தை இயக்கி இன்று வெளியாகும் என பல கனவுகளுடன் காத்துக் கொண்டிருந்த இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் படம் காலையில் வெளியாகாது என்று தெரிந்ததுமே அதிர்ந்து போனார். தன்னுடைய அப்பாவே 3 முறை தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க டிக்கெட் எடுக்க முயன்று முடியாமல் திரும்பி வந்தார். அதே போல எத்தனையோ ரசிகர்கள் படத்தை பார்க்க சென்று முடியாமல் ஏமாந்து போயிருப்பீங்க. உங்க அனைவரிடத்திலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் உறுதுணையாக இருந்த படக்குழு, தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்றி. அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. இன்று மாலை முதல் வீர தீர சூரன் படம் திரையரங்குகளில் வெளியாகும் கண்டு ரசியுங்கள் என இயக்குநர் அருண் குமார் உருக்கமாக பேசிய வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
தயாரான விக்ரம் ரசிகர்கள்: விக்ரம் படத்துக்கு ஒவ்வொரு முறையும் ஏதாவது ரூபத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த முறை அவருக்கு பக்க பலமாக நாம இருக்க வேண்டும் என ரசிகர்கள் இன்று மாலை வெளியாகவுள்ள வீர தீர சூரன் படத்தை காண மீண்டும் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். காலை முதலே மேள தாளங்கள் முழங்கி FDFS கொண்டாட்டங்கள் பல தியேட்டர்களில் நடத்தப்பட்டு படம் வெளியாகாமல் போனதால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு படம் வெயிட்டாக அமைந்தால் மட்டுமே மிகப்பெரிய மருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











