Veera Dheera Sooran: எல்லா பஞ்சாயத்தும் ஓவர்.. இன்று மாலை முதல் வீர தீர சூரன் ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என B4U எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை இன்று காலை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் அந்த நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் 4 வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகளை தயாரிப்பு நிறுவனம் B4U நிறுவனத்துடன் நடத்தி வந்த நிலையில், சற்றுமுன் சமரச பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைத்த நிலையில், படத்தை வெளியிடக் கூடாது என விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

அதன் காரணமாக மாலை 6 மணி முதல் வீர தீர சூரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக சியான் விக்ரம் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ரசிகர்கள் அப்செட்: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு காலை 9 மணிக்கே படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் படம் வெளியாகாது என்பதை அறிந்து ரொம்பவே அப்செட் ஆகிவிட்டனர். வீர தீர சூரன் படத்துக்கு சென்றவர்கள் அந்த படம் வெளியாகாத நிலையில், மோகன்லாலின் எம்புரான் படத்துக்கு சென்றுவிட்டனர். இன்று காலை முதல் வரவேண்டிய வசூல் வீர தீர சூரன் படத்துக்கு அப்படியே லாஸ் ஆகி போய்விட்டது.
விக்ரமின் விடாமுயற்சி: பொங்கலுக்கே வீர தீர சூரன் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர், குடியரசு தினத்துக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில், வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27ம் தேதி இன்று வெளியாகும் என முடிவு செய்யப்பட்டு சியான் விக்ரமும் பல இடங்களுக்கு சென்று தீவிரமாக புரமோஷன் செய்து வந்தார். படம் வெளியாகாத சூழல் உருவான நிலையில், கடைசியாக தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கவும் அவர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. விக்ரமின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது என்கின்றனர்.
மாலை முதல் ரிலீஸ்: வீர தீர சூரன் படத்துக்கு இருந்த அனைத்து விதமான சட்ட சிக்கல்களும் தீர்ந்து விட்டது என லேட்டஸ்ட் அப்டேட்கள் கிடைத்துள்ளன. இதனால், சியான் விக்ரம் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்களை படம் திருப்திப்படுத்திவிட்டால் மிகப்பெரிய வெற்றியை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 6 மணி முதல் வீர தீர சூரன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











