Rajini - ரஜினிகாந்த்தான் அடுத்த எம்ஜிஆர்.. தனி கட்சி ஆரம்பிக்க வேண்டும்.. வீரப்பன் விரும்பியது இதுவா?
சென்னை: Veerappan On Rajinikanth (ரஜினிகாந்த் பற்றி வீரப்பன்) ரஜினிகாந்த் குறித்து வீரப்பன் பேசிய காணொலி பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் ரஜினிகாந்த். இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் பெரும்பாலும் ஹிட் படங்களிலேயே நடித்திருக்கிறார்.

அதனாலேயே அவர் சூப்பர் ஸ்டார், தலைவர் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது 170ஆவது படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.
ரஜினி மீதான விமர்சனம்: ரஜினிகாந்த் மீது தமிழ்நாட்டு ரசிகர்கள் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அவர் எது சொன்னாலும் எதை வேண்டுமானாலும் செய்யும் எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனமும் காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல் அரசியலுக்கு வருகிறேன் சொல்லி ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
பொது விஷயங்களில்: தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திவரும் ரஜினிகாந்த் 90களில் பொது விஷயங்களிலும் தலையிட்டவர். குறிப்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது; திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தது என அந்தக் காலத்தில் ஹாட் டாபிக்காக வலம் வந்தார். அதிலும் வீரப்பன் விவகாரத்திலும் ரஜினிகாந்த் தலையிட்டது குறிப்பிடத்தக்கது.
வீரப்பன் விஷயத்தில் ரஜினி: வீரப்பன் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தியபோது அவரை எப்படியாவது வீரப்பனிடமிருந்து மீட்டு விட வேண்டுமென்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் தீவிர முயற்சிகளை செய்தார் ரஜினி. தூதுவராக பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை நியமித்ததிலிருந்து அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் பேச்சுவார்த்தைக்காக அவரை அழைத்து சென்றது என ரஜினிகாந்த் மும்முரமாக களமாடினார்.
கூஸ் முனியசாமி வீரப்பன்: இந்நிலையில் வீரப்பனின் வாழ்க்கை ஆவண தொடராக தயாராகியிருக்கிறது. நக்கீரன் சார்பில் தயாராகியிருக்கும் இதனை வசந்த பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஷ்மி, நக்கீரன் கோபாலின் மகள் பிரபாவதி இணைந்து உருவாக்கியிருக்கின்றனர். ஆறு எபிசோடுகளாக உருவாகியிருக்கும் இந்த ஆவண தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகிறது.
ரஜினி பற்றி வீரப்பன்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்த ஆவண தொடர் உருவாகியிருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற சூழலில் ரஜினி குறித்து வீரப்பன் பேசும் காட்சி தற்போது வெளியாகி கவனம் ஈர்த்திருக்கிறது. ரஜினிகாந்த் குறித்து வீரப்பன், “எம்ஜிஆர் ரொம்பவே கஷ்டப்பட்டவர். அவர் மாதிரி இன்னொரு பிள்ளை பிறப்பது கஷ்டம். ஆனால் ரஜினிகாந்த் எம்ஜிஆர் போல் அமைவார் என்று எனக்கு தோன்றுகிறது.
ரஜினிகாந்த் எல்லோரையும் மதிக்கக்கூடியவர். தெய்வ பக்தி நிறைய உள்ளவர். ஐயா ரஜினிகாந்த் அவர்களே உங்களிடம் நான் சொல்கிறேன், நீங்கள் தனிக்கட்சி தொடங்கி தனித்துதான் போட்டியிட வேண்டும். யாருக்கும் குடையாக இருக்கக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











