சிம்புவைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கருக்கு டாக்டர் பட்டம்.. 30வது ஆண்டில் கிடைத்த அங்கிகாரம்!
சென்னை : இயக்குநர் ஷங்கர் சிறப்பான மற்றும் பிரம்மாண்ட படங்களின் நாயகனாக தொடர்ந்து கோலிவுட்டில் இருந்து வருகிறார்.
அவர் தற்போது டோலிவுட்டிலும் நடிகர் ராம்சரணின் ஆர்சி15 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து ஷங்கர் மீண்டும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் இயக்கத்தை கையில் எடுக்கவுள்ளார்.

இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர் தன்னுடைய படங்களில் பிரம்மாண்டத்தை அதிகமாக கையாண்டு வருபவர். இவரது முதல்வன் உள்ளிட்ட படங்களில் துவங்கி சமீபத்திய எந்திரன், 2.ஓ படங்கள் வரையில் தன்னுடைய பிரம்மாண்ட படைப்பால் ரசிகர்களை மிரட்டி வருபவர். குறிப்பாக காட்சி அமைப்புகளில் பிரம்மாண்டத்தை தருகிறாரோ இல்லையோ பாடல்களில் கண்டிப்பாக அது நிறைந்திருக்கும்.

ஷங்கருக்கு கௌரவம்
அந்த வகையில் பல கலைத்துறையின் சங்கமமான சினிமாவில் பிரம்மாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக மக்கள் போற்றும் கலைஞனாக இருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு அவருடைய படங்களே மிகப்பெரிய கௌரவமாகத்தான் அமைந்துள்ளன. அவருக்கு மேலும் ஒரு கௌரவத்தை தற்போது வேல்ஸ் பல்கலைக்கழகமும் கொடுத்துள்ளது.

தனியாக அடையாளப்படுத்திய திறமை
கும்பகோணத்தில் நடுத்தர குடும்பத்தில்தான் பிறந்தார் இயக்குர் ஷங்கர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்த இவருக்கு கல்லூரி காலகட்டத்திலேயே எழுத்து சிறப்பாக கைவந்தது. மேலும் கலைநிகழ்ச்சிகளையும் எடுத்து நடத்தினார். இவரது திறமை இவரை தனியாக அடையாளப்படுத்திக் காட்டியது.

1993ல் வெளியான ஜென்டில்மேன்
இதையடுத்து அமெச்சூர் நாடகக்குழுவில் சேர்ந்த இவரின் திறமை எஸ்ஏ சந்திரசேகரின் கவனத்தை ஈர்க்க அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். தொடர்ந்து சிறிய விளம்பரப் படங்களை இயக்கிய இவர் திரை இயக்குநராக மாறினார். 1993ல் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் ஷங்கரை கோலிவுட்டில் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்
தொடர்ந்து காதலன், இந்தியன் ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் என இவரது படங்கள் அனைத்தும் வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றன. கமல், ரஜினி, விஜய் என முன்னணி நாயகர்களின் புகழுக்கு இவர் மேலும் சிறப்பை சேர்த்தவர். இவரது படங்கள் இவருக்கு ஏராளமான விருதுகளையும் பெற்றுத்தந்தது.

கௌரவ டாக்டர் பட்டம்
அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தற்போது இவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுத் தந்துள்ளது. இவர் திரையுலகில் அறிமுகமாகி தற்போது 30 ஆண்டுகளை கடந்த நிலையில் இவருக்கு இந்தப் பட்டம் சாத்தியமாகியுள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட ஷங்கருக்கு தற்போது வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

சிம்புவை தொடர்ந்து ஷங்கருக்கு டாக்டர் பட்டம்
முன்னதாக நடிகர் சிம்புவிற்கு சில மாதங்களுக்கு முன்பு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் தற்போது டைரக்டர் ஷங்கருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. அடுத்ததாக இந்தியன் 2 படத்தை விரைவில் இயக்கவுள்ள ஷங்கருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











