கஸ்டடியில் இருந்து ரிலீஸான நாக சைதன்யா... வெங்கட் பிரபுவின் அடுத்த டார்க்கெட்டில் அஜித், SK!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள கஸ்டடி திரைப்படம் மே 12ம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள கஸ்டடி திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்ட வெங்கட் பிரபு அடுத்து எந்த ஹீரோவுடன் இணையவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வெங்கட் பிரபுவின் கஸ்டடி
மாநாடு, மன்மத லீலை என அடுத்தடுத்து படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, அதனைத் தொடர்ந்து கஸ்டடி படத்தை இயக்கி வந்தார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நாக சைதன்யாவின் 22வது படமாகவும், வெங்கட் பிரபுவின் 11வது திரைப்படமாகவும் இது உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் நிறைவு
கஸ்டடி திரைப்படம் மே 12ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. வெங்கட்பிரபுவின் வேட்டை என்ற டேக் லைனுடன் உருவாகியுள்ள கஸ்டடி, ஆக்ஷன் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நாக சைதன்யா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும், முக்கியமான பாத்திரங்களில் சரத்குமார், அரவிந்த் சாமி, ராம்கி, பிரியாமணி, பிரேம்ஜி, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றுவந்த கஸ்டடி ஷூட்டிங் முடிவுக்கு வந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு
கஸ்டடி ஷூட்டிங் முடிவுக்கு வந்ததை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார் வெங்கட் பிரபு. அதில், "நாக சைதன்யா உங்களை இந்த கஸ்டடியில் இருந்து விடுவிக்கிறோம்" என வெங்கட் பிரபு கூற, பதிலுக்கு "உங்கள் அனைவரையும் மே 12ம் தேதி கஸ்டடியில் எடுக்கிறோம்" என ரசிகர்களை நோக்கி கூறுகிறார். இந்த வீடியோ வெளியானதில் இருந்து வெங்கட் பிரபு உள்ளிட்ட கஸ்டடி குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கூட்டணியில் யார்?
வெங்கட் பிரபுவின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதனடிப்படையில் கஸ்டடி திரைப்படமும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் எப்போது ஷூட்டிங் போகலாம் என வெங்கட் பிரபுவிடம் ஒரு பேட்டியில் கேட்டிருந்தார். அதனால் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி இணையும் என சொல்லப்படுகிறது.

காத்திருக்கும் அஜித்?
இன்னொரு பக்கம் ஏகே 62 படத்திற்காகவே வெங்கட் பிரபுவை அஜித் எதிர்பார்த்து இருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதனால், ஏகே 63 இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதனால், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து இப்போதைக்கு எந்த அப்டேட்டும் இல்லை என்றாலும், விரைவில் அவரே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











