தொடங்கியது வெங்கட் பிரபுவின் வேட்டை… நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சென்னை: தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நாக சைதன்யா பிறந்தநாள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். ஆனால், திருமணம் முடிந்த நான்கே ஆண்டுகளில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில், சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சமந்தாவை நாக சைதன்யா நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததாக சொல்லப்பட்டது. அதேபோல் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு சேர்ந்து வாழ உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாக சைதன்யாவுக்கு சமந்தா வாழ்த்து தெரிவிப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா
நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். நாக சைதன்யாவின் 22வது படமான இது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. 'NC 22' என்ற டைட்டிலில் படப்பிடிப்பு நடந்து வந்த இது. வெங்கட் பிரபுவின் 11வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'NC 22' படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதன்படி, 'NC 22' படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கஸ்டடியில் நாக சைதன்யா
'NC 22' படத்தின் டைட்டில் 'கஸ்டடி' என படக்குழு அறிவித்துள்ளது. திமிறி வரும் நாக சைதன்யாவை ஏராளமான போலீஸ்காரர்கள் தடுப்பதோடு, அவரை நோக்கி துப்பாக்கிகளை காட்டுகின்றனர். நாக சைதன்யாவும் போலீஸ் யுனிஃபார்மில் இருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் 'கஸ்டடி' என்ற டைட்டிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. வெங்கட் பிரபு - நாக சைதன்யா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், ரொமாண்டிக் ஜானரில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதனால் தற்போது வெளியாகியுள்ள டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், படம் ஆக்சன் ஜானரில் மிரட்டும் என அப்டேட் கொடுத்துள்ளது.

வெங்கட் பிரபுவின் வேட்டை
கஸ்டடி என்ற டைட்டிலின் கீழே, வெங்கட்பிரபுவின் வேட்டை என டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் படங்களில் எப்போதும் டைட்டிலுக்கு கீழே கொடுக்கப்படும் டேக் லைன் ரொம்பவே பிரபலமாகும். அந்த வகையில் தற்போது கஸ்டடி படத்திற்கு வெங்கட் பிரபுவின் வேட்டை என கொடுக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கும் இந்தப் படத்திற்கு, இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.

நட்சத்திரப் பட்டாளம்
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, பிரியாமணி, பிரேம்ஜி, சம்பத் ராஜ், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர், சீரியல் நடிகை பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல், கஸ்டடி படத்தில் வில்லனாக நடிக்க ஜீவா கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











