சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வெங்கட் பிரபுவின் மகள்.. நாகசைத்தன்யாவுடன் இணையும் ஸ்ரீ ஷிவானி!
சென்னை : நடிகராக அறிமுகமாகி இயக்குநராக அதிரடி கிளப்பி வருகிறார் வெங்கட்பிரபு. அஜித் உள்ளிட்ட ஹீரோக்களை வைத்து இவர் வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இளையராஜா மற்றும் கங்கை அமரன் என சினிமாவில் பிரபலமானவர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் வெங்கட்பிரபு. இவரது சகோதரர் பிரேம்ஜியும் சினிமாவில் கலக்கி வருகிறார்.
தற்போது நாக சைத்தன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் கஸ்டடி படம் : தமிழில் நடிகராக அறிமுகமாகி இயக்குநராக மாறியுள்ளவர் வெங்கட்பிரபு. மேலும் பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமையை காட்டி வருகிறார். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட்பிரபு, ஹீரோவாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் இயக்குநராக உருமாறினார். சென்னை 600028 படத்தின் மூலம் அவர் இயக்குநராக மாறி, அந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுத்தார்.
தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், ஆரம்ப காலத்தில் தன்னுடைய உறவினர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் இசையில் பாடி தொடர்ந்து இசைநிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். முதல் படமான சென்னை 28 படத்தின்மூலம் கிரிக்கெட்டையும் நகைச்சுவையையும் இணைந்து சிறப்பான வெற்றியை கொடுத்தார்.
தொடர்ந்து அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவானது. தொடர்ந்து கார்த்தி, சூர்யா ஆகியோரையும் வைத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படத்தில் சிம்புவின் நடிப்பு அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தற்போது நாக சைத்தன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படத்தில் கிரீத்தி ஷெட்டி, நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கவுள்ள நிலையில், படம் மே மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பாடல் வரும் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் பாடல்தான் வரும் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இளம் வயதிலேயே இவர் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார். இவரது தாத்தா கங்கை அமரன் மற்றும் இளையராஜா இருவரும் இசையமைப்பாளர்களாக இருந்த போதிலும் இவர்களும் பாடலாசிரியர்களாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீ ஷிவானியும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











