விஸ்வரூபம் எடுக்கும் கொரோனாவை... "நரப்பா கொஞ்சம் பொறப்பா".. ஒத்திவைத்த வெங்கடேஷ்!
ஐதராபாத் : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் பல முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்படும் பல படங்களின் ரிலீஸ் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. சிரஞசீவி ,ராம் சரண் இணைந்து நடிக்கும் ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்த நரப்பா படத்தை ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கி உள்ளார். இந்த படம் மே 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பதாக வெங்கடேஷ் சமூக வலைதளம் வழியாக அறிவித்துள்ளார்.

தள்ளிப்போகும் நரப்பா ரிலீஸ்
அந்த பதிவில் அவர், கொரோனா பரவல் காரணமாக மே 14 ம் தேதி நரப்பா ரிலீஸ் செய்யப்படாது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் புதிய தேதி, இந்த எதிர்பாராத நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வந்த பிறகு அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவிற்கு பிறகு ரிலீஸ் தேதி
இது பற்றி படக்குழு கூறுகையில், தமிழில் அசுரன் என்ற பெயரில் ரிலீசான இந்த படம் தெலுங்கு ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்துள்ளோம். இதற்காக அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்துள்ளோம். தற்போது உலகமே நெருக்கடியான சூழலில் உள்ளது. அதனால் ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தியேட்டரில் ரிலீஸ் செய்யும் தேதியை ஒத்திவைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

அசுரன் தெலுங்கு ரீமேக்
இந்த படத்தில் தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் பிரியா மணி நடித்துள்ளார். இவர்களுடன் கார்த்திக் ரத்னம், ராவ் ரமேஷ், ராஜீவ் கனகலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கடேஷும் இணைந்து தயாரித்துள்ளார்.

தள்ளிபோகுமா எஃப் 3 ரிலீஸ்
தற்போது வெங்கடேஷ் எஃப் 3 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 27 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் நீடித்தால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











