Rajinikanth - தலைவர் தரிசனம்.. ரஜினியை நேரில் சந்தித்த கொல்கத்தா அணி வீரர்கள்.. டபுள் சந்தோஷம்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) சேப்பாக்கத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தனர்.
ஐபிஎல் 2023 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றிருக்கும் இந்த சீசன் இதுவரை இல்லாத அளவு கடும் போட்டி நிறைந்ததாக காணப்படுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே லீக் போட்டிகள் எஞ்சி உள்ளன. தற்போதைய நிலவரப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களை பிடிக்க சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. டெல்லி அணி தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது.

சென்னையை Vs கொல்கத்தா: இந்தச் சூழலில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைத்தானத்தில் எதிர்கொண்டது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கில்லி என்பதால் பெரிய ஸ்கோர் அடித்து கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் ஆட்டத்தை பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சென்னை அணி 144 ரன்களை மட்டுமே எடுத்தது..
சென்னையை வீழ்த்திய கொல்கத்தா: இதையடுத்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் 3 விக்கெட்டுகளை மளமளவென விட்டாலும், அடுத்து வந்த நிதிஷ் ராணா மற்றும் ரின்கு சிங் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்துவீச்சை எந்தவித சிரமமுமின்றி எதிர்கொண்டது. இரண்டு பேரும் அரை சதம் அடித்தனர். இதன் காரணமாக ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை 18.3 ஓவர்களில் வீழ்த்தியது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு: சென்னை அணி தோற்றதன் காரணமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப்போகும் மூன்று அணிகள் எது என்ற போட்டி மேலும் வலுவடைந்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து நடக்கப்போகும் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஐபிஎல் 2023 உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. எனவே ரசிகர்களும் அந்த பரபரப்பான போட்டிகளை காண மிகுந்த ஆவலோடு இருக்கின்றனர்.

ரஜினியை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்: இந்நிலையில் சென்னை அணியை வீழ்த்திய உற்சாகத்தோடு கொல்கத்தா அணியின் வீரர்களான வெங்கடேஷ் ஐயரும், வருண் சக்கரவர்த்தியும் போயஸ் கார்டன் சென்று ரஜினியை நேரில் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினர். மேலும் அவரோடு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
தலைவர் தரிசனம்: தமிழ்நாட்டை சேந்தவர்கள் என்றாலும் வெங்கடேஷ் ஐயரும், வருண் சக்கரவர்த்தியும் கொல்கத்தாவுக்கு விளையாடிவருகின்றனர். அவர்கள் இருவரும் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியை சந்தித்தது தொடர்பாக வெங்கடேஷ் ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தலைவர் தரிசனம்.. இறுதியாக ரஜினிகாந்த் சாரை பார்த்துவிட்டோம்' என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











