"வெரி வெரி பேட்".. இப்போதான் சூடு பிடிக்குது.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் பிரபலங்கள்!
சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.
மூன்று நாட்கள் ஆகியும் மெளனம் காத்து வந்த திரை பிரபலங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்க தொடங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டை தாண்டி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர் தவான் உள்ளிட்டோரும் சாத்தான்குளம் மரணத்திற்கு நீதி கேட்டு பதிவுகளை இட்டுள்ளனர்.

பிரபலங்கள் கண்டனம்
சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சினிமா பிரபலங்களான ராஜு முருகன், பா. ரஞ்சித், ஜெயம் ரவி, சாந்தனு, கங்கனா ரனாவத், இமான், கார்த்திக் சுப்புராஜ், சுசித்ரா, காஜல் பசுபதி உள்ளிட்ட பலர் முன்னதாக செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையின் அட்டூழியத்தை கண்டித்தும் பதிவுகளை போட்டனர்.

ஜீவா கண்டனம்
#JusticeForJeyarajAndFenix என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், தற்போது நடிகர் ஜீவா தனது டிவிட்டர் பக்கத்தில், "வெரி வெரி பேட்.. பேட் டு தி கோர்" என ஜிப்ஸி பட பாடலில் காவல்துறையை கண்டித்து சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பாடல் வரிகளை போட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ரத்னகுமார் கண்டனம்
ஒரு கை தட்டினால் ஓசை வராது.. பல கைகள் இணைந்து தட்டினால் இந்த விசயத்தில் நீதி கிடைக்கும் என்பதை உணர்ந்த பிரபலங்கள், தற்போது தைரியமாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விசாரணையின் பேரில் அப்பாவிகளை கொலை செய்வது மிகப்பெரிய குற்றம் என இயக்குநர் ரத்னகுமார் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

ராஷி கன்னா கண்டனம்
ஆசன வாயில் லத்தியை சொருகி காவல் நிலையத்தில் துன்புறுத்தி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீஸ் அதிகாரிகள் எப்படி கொன்றனர் என்பதை உலகம் அறிய வேண்டும் என்ற வீடியோ பதிவை பாடகி சுசித்ரா வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை ஷேர் செய்து நடிகை ராஷி கன்னா, இந்த இரக்கமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தப்புன்னா தப்புதான்
தப்புன்னா தப்புதான்.. அவங்க யாரா இருந்தாலும் கவலை இல்லை, சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், அதற்காக நாம் ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சொல்ல முடியாது. அந்த இரண்டு இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என கொதித்தெழுந்துள்ளார்.

அமைரா தஸ்துர் கண்டனம்
அநேகன் பட நாயகி அமைரா தஸ்தூர் இந்த கொடூர கொலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். காவல்துறை இந்த அளவுக்கு கேவலமாக, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை உடனடியாக பெற்றுத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அதுல்யா கண்டனம்
ஒரு உயிரை கொல்லும் அதிகாரம் இந்த உலகில் யாருக்குமே கிடையாது. சாத்தான்குளத்தில், மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு நிகழந்த அநியாயம், இனிமேல் யாருக்கும் நடக்கக் கூடாது. நீதித்துறை குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ட்வீட் போட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் கண்டனம்
"பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை... நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு... இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.." என ஜிவி பிரகாஷ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











