மூச்சுத்திணறல்.. பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் பிரார்த்தனை!
மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1944ம் ஆண்டு வெளியான Jwar Bhata படத்தின் மூலம் அறிமுகமானவர் திலீப் குமார்.
பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

98 வயது
பாகிஸ்தானில் உள்ள பெஷாவார் பகுதியில் 1922ம் ஆண்டு பிறந்த முகம்மது யூசுப் கான் சினிமாவில் திலீப் குமார் என்கிற பெயரில் பிரபலமானார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாலிவுட்டில் நடித்துள்ள திலீப் குமார் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தற்போது 98 வயதாகிறது.

முதல் கான்
சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கானுக்கெல்லாம் முன்னாடியே பாலிவுட்டின் முதல் கான் நடிகர் என்கிற பட்டப்பெயரும் திலீப் குமாருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்டாஸ், ஆன், தேவதாஸ், கங்கா ஜமுனா, ராம் அவுர் ஷியாம் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக 1998ம் ஆண்டு கில்லா எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
98 வயதாகும் இந்தியாவின் முது பெரு நடிகர் திலீப் குமார் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். இந்நிலையில், திடீரென இன்று காலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள கர் இந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

சகோதரர்கள் கொரோனாவுக்கு பலி
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் இவரது சகோதரர்கள் அஸ்லாம் கான் (88) மற்றும் இஷான் கான் (90) பலியாகினர். அந்த சோகமே இவரை ரொம்பவே பாதித்தது. கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக இதே மருத்துவமனைக்கு சென்ற திலீப் குமார், அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு நலமுடன் வீடு திரும்பினார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
நடிப்பு ஜாம்பவான் திலீப் குமார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றும், நூறு ஆண்டுகளை கடந்தும் அவர் நலமுடன் வாழ வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











