ஜோக்கர் துளசி மிக அற்புதமான மனிதர்…. ராதிகா இரங்கல் ட்வீட் !
சென்னை : மூத்த பழம் பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துளசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஜோக்கர் துளிசி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

மூத்த நடிகர்
ஒரு மூத்த மேடை நடிகரும் திரைப்பட நடிகருமான ஜோக்கர் துளசி தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் முக்கியமான துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

உயிரிழந்தார்
வாணி ராணி, கோலங்கள், கேளடி கண்மணி , அழகு ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றுக்காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அற்புதமான மனிதர்
வாணி ராணியில் ஜோக்கர் துளசி ராதிகா சரத்குமாருடன் நடித்திருந்தார். இவரது மறைவு குறித்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராதிகா சரத்குமார், ஜோக்கர் துளசி மிக அற்புதமான மனிதர். பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தவர். நேர்மறையான எண்ணங்களுடன் தினமும் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவார். வாணி ராணியில் அவருடன் பணியாற்றிய நினைவுகள் மறக்கமுடியாதவை என பதிவிட்டுள்ளார்.

இரங்கல்
இதேபோல நடிகர் மோகன் ராமன் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜோக்கர் துளசி 70களிலிருந்து நடித்து வருகிறார். மிகவும் மரியாதைக்குரிய நபர், ஜோதிடத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். பல படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











