புற்றுநோயிலிருந்து மீண்டேன்.. என் மனைவி இல்லாமல் சிவண்ணா இல்லை.. சிவராஜ் குமார் உருக்கம்!
சென்னை: கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு கடந்த வாரம் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தற்போது புற்றுநோய் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், அறுவை சிகிச்சைக்கு முன் நான் பயந்தேன். ஆனால், ரசிகர்களின் அன்பு எனக்கு தைரியத்தை கொடுத்தது என்று பேசி உள்ளார்.
கன்னட திரைப்பட நடிகரான சிவராஜ் குமார், ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். அதே போல கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார். அடுத்தடுத்து படத்தில் பிஸியாக நடித்து வந்த சிவராஜ் குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால், அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் பரவின.

அறுவை சிகிச்சை முடிந்தது: இதையடுத்து, அமெரிக்கா சென்ற சிவராஜ் குமாருக்கு 24ந் தேதி அமெரிக்காவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், சிவராஜ் குமார் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்து இருந்தார். இருப்பினும் சிவராஜின் தீவிர ரசிகர்கள் அவரின் உடல் நலன் குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருந்தனர்.இதையடுத்து, சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கீதா இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவில் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
புற்றுநோயிலிருந்து மீண்டு விட்டார்: அதில் பேசிய கீதா, சிவராஜ் குமாருக்கு புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர், புற்றுநோயில் இருந்து மீண்டு இருக்கிறார். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் அவர் மீண்டு இருக்கிறார். சிவராஜ்குமாரின் அனைத்து அறிக்கையும் பயப்படும் வகையில் இல்லை என்றும், அவர் அதிகாரப்பூர்வமாக புற்றுநோயிலிருந்து விடுபட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

சிவண்ணா இல்லை: இதைத்தொடர்ந்து பேசிய சிவராஜ்குமார், நான் அமெரிக்காவிற்கு வரும் போது சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன், நான் எப்போதும் பேசும் போது உணர்ச்சிவசப்படக்கூடியவன். ஆனால், மன தைரியத்தை என் ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த தைரியத்தால் நான் நிம்மதியாக இருந்தேன். இந்த கடுமையான நேரத்தில் என் மனைவி கீதா, எனக்கு பக்கபலமாக இருந்தாள். என் வாழ்நாள் முழுவதும் கீதா இல்லாமல் சிவண்ணா இல்லை. அந்த அன்பு வேறு யாரிடம் இருந்தும் எனக்கு கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. அதே போல, மகள் நிவேதிதா, எப்போதும் என் அருகிலேயே இருந்து என்னை கவனித்துக்கொண்டாள்.
பணிக்கு திரும்புவேன்: புற்றுநோயில் இருந்த முழுமையாக குணமடைய மருத்துவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர். எனக்கு நடந்த ஆப்ரேஷன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்ல, என் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு, செயற்கையாக மாற்றப்பட்டது. என்ன ஆப்ரேஷன் நடந்தது என்று சொன்னால், அனைவரும் கவலைப்படலாம் என்று நினைத்தோம். அதனால்தான் அதுபற்றி சொல்லாமல் கவலையை எங்களுக்குள்ளேயே வைத்திருக்க முடிவு செய்தோம். இப்போது நான் நலமாக இருக்கிறேன். ஜனவரி இறுதி வாரத்தில் நான் இந்தியா திரும்பி விடுவேன், மார்ச் மாதத்திற்குப் பிறகு முழுமையாக பணிக்கு திரும்புவேன்.
நான் மீண்டும் வருகிறேன், முன்பு சிவண்ணா எப்படி இருந்தாரோ, அதே போல் நடனம், சண்டைக்காட்சிகள் மற்றும் தோற்றத்தில் இரண்டு மடங்கு பவர் இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்தால் நான் எப்போதும் ஆற்றல் நிறைந்தவனாக இருப்பேன் என்று சிவராஜ் குமார் பேசிஉள்ளார்.


Click it and Unblock the Notifications











