500 படங்களில் நடித்தாலும் கடைசியில் கர்ச்சிப் விற்க வேண்டிய வேதனை.. மறைந்தார் ரங்கம்மாள் பாட்டி!
சென்னை: எம்ஜிஆர் முதல் வடிவேலு வரை பல முன்னணி நடிகர்கள் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரங்கம்மாள் பாட்டி உடல் நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.
"பாண்டியை வரச் சொல்லு ஃபர்ஸ்ட் நைட் நடத்தணும்" என முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த காமெடி மிகப்பெரிய ஹிட் அடித்தது.
ஆனால், கடைசி காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்ட இவர் மெரினா கடற்கரையில் கர்ச்சிப் விற்று வந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ரங்கம்மாள் பாட்டி காலமானார்
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 500 படங்களில் நடித்துள்ளார் ரங்கம்மாள் பாட்டி. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவரை செல்லமாக குட்டி அம்மா பாட்டி என்றே அழைப்பார்கள். பழம்பெரும் நடிகையான இவர் இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாண்டியை வரச்சொல்லு
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நடித்து வரும் கே.ஆர். ரங்கம்மாள் பாட்டி நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான பரத்தின் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் இடம்பெற்ற "பாண்டியை வரச்சொல்லு ஃபர்ஸ்ட் நைட் நடத்தணும்" என்கிற காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கர்ச்சிப் விற்றார்
9 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த போதும், கடைசி காலத்தில் ரங்கம்மாள் பாட்டியை வறுமை ஆட்கொண்டது. மெரினா கடற்கரையில் கர்ச்சிப் விற்று தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். நடிகர் சங்கம் அவருக்கு உதவித் தொகையாக ரூ. 5 ஆயிரத்தை 2018ம் ஆண்டு வழங்கி இருந்தது. சினிமாவில் உச்ச நட்சத்திரங்களை தவிர பலரும் நலிவடைந்த கலைஞர்களாகத் தான் இன்னமும் இருந்து வருகின்றனர் என்பது மறைக்க முடியாத உண்மை.

ரசிகர்கள் சோகம்
உடல்நலக் குறைவால் தனது சொந்த ஊரான அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் இன்று காலமான செய்தியை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











