பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்
சென்னை: எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை குசலகுமாரி சென்னையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை குசலகுமாரி (83). எம்.ஜி.ஆர்- சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார்.

அது மட்டுமின்றி, எம்.ஜி.ஆரின் மதுரை வீரன், சிவாஜி கணேசனுடன் பராசக்தி, கள்வனின் காதலி, ஹரிச்சந்திரா மற்றும் கொஞ்சும் சலங்கை, அவ்வையார் உள்பட பல படங்களிலும், மன்மத லீலை படத்தில் கமல்ஹாசனின் மாமியார் வேடத்திலும் இவர் நடித்து இருந்தார்.
மலையாளத்தில் பிரேம் நசீர், தெலுங்கில் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் நடித்துள்ளார்.

முறைப்படி பரத நாட்டியம் கற்றவரான குசலகுமாரி, கொஞ்சும் சலங்கை படத்தில் ஆடிய போட்டி நடனம் பிரபலம். சாவித்திரிக்கு முன்பே மிகவும் வேகமாக கார் ஓட்டும் நடிகை என்ற பெருமை பெற்றவர் இவர்.
திருமணமே செய்து கொள்ளாமல் தனது தம்பி குடும்பத்துடன் சென்னை நந்தனம் பழைய டவர் கிளாக் கட்டிடத்தில் 6-வது மாடியில் சகோதரர் கமலசேகர் வீட்டில் வசித்து வந்தார் குசலகுமாரி. தற்போது 83 வயதான இவர் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக்குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. குசலகுமாரியின் உடல் நேற்று பகல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குசலகுமாரியின் மற்றும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











