நகைச்சுவை நடிகர் 'டணால்' தங்கவேலு மனைவி எம் சரோஜா மரணம்!

மயிலாடுதுறையைச் சேர்ந்த எம் சரோஜா 14 வயதில் நடிக்க வந்தார். மறைந்த இயக்குநர் கே சுப்பிரமணியம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஐம்பதுகளில் தொடங்கி எழுபதுகள் வரை நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த மறைந்த நடிகர் டணால் கே ஏ தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, காதலித்து மணந்தனர் (1958). அதன் பிறகு 200 படங்களுக்கு மேல் இணைந்து நடித்தனர்.
கல்யாணப் பரிசு, தேன் நிலவு போன்ற படங்களில் இருவரின் நடிப்பும் இன்றைக்கும் திகட்டாத திரை விருந்து.
மொத்தம் 300 படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்த எம் சரோஜா, 1994-ம் ஆண்டு கணவரின் மறைவுக்குப் பிறகு, மகள் சுமதியுடன் சென்னை பாண்டிபஜாரில் உள்ள மாசிலாமணி தெரு வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த இரு மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக உயிர் பிரிந்தது.
பாண்டி பஜார் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடல், பிற்பகலுக்குப் பிறகு கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்படுகிறது.
பெரும் நடிகையான எம் சரோஜா மறைவு குறித்து சினிமாவுலக அமைப்புகள் எதுவும் இதுவரை வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கம் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











