5 முதல்வர்களின் படங்களில் நடித்த பெருமைக்குரிய "ஆச்சி" மனோரமா
சென்னை: தமிழின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக கலக்கிய ஆச்சி மனோரமா நேற்று இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக அகால மரணமடைந்தார்.
4 மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற ஆச்சி நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாக ஆச்சியின் மரணம் மாறியிருக்கிறது.
தனது 12 வது வயதில் நாடகங்களின் மூலம் தனது நடிப்புலக வாழ்க்கையைத் துவங்கிய மனோரமா தனது கடைசி நாள்வரை நடிப்பின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேபி சாந்தா
1937 ம் வருடம் மே மாதம் 26 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தார். காசி கீழக்குடியார் - ராமாமிர்தம் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த மனோரமா தனது 12 வது வயதில் நாடகங்களின் மூலமாக தனது நடிப்புலக வாழ்க்கையைத் துவங்கினார். 12 வது வயதில் தனது நடிப்புலக வாழ்வை ஆரம்பித்த மனோரமாவுக்கு அவரது அம்மா ராமாமிர்தம் பக்கபலமாக திகழ்ந்தார். தனது பல பேட்டிகளிலும் ஆச்சி இதனை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மாலையிட்ட மங்கை
தமிழ் சினிமாவில் மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலமாக தனது திரை வாழ்வை 1958 ம் ஆண்டு துவக்கினார். முதன்முதலில் ஆச்சி ஹீரோயினாக நடித்த படம் கொஞ்சும் குமரி.

பாடகியாக
சிறந்த நடிகை மட்டுமன்று நல்ல பாடகியாகவும் திகழ்ந்த ஆச்சி சுமார் 300 க்கும் அதிகமான பாடல்களை தனது திரையுலக வாழ்க்கையில் பாடியிருக்கிறார். மனோரமா பாடலில் முதன்முதலில் வெளியான படம் மகளே உன் சமத்து.

நாகேஷ் - மனோரமா
1960- 69 களில் நாகேஷ் - மனோரமா ஜோடி நகைச்சுவையில் சிறந்து விளங்கியது. 1970 - 80 களில் சோ மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவருடன் இணைந்து நடித்த ஆச்சி நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தார்.

1000 க்கும் மேற்பட்ட படங்கள்
தமிழ் சினிமாவில் 1000 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. 65 வருடங்களுக்கும் மேலாக நடிகையாக வாழ்ந்து தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் நடிப்பிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் ஆச்சி.

5 முதல்வர்களுடன்
தனது திரை வாழ்க்கையில் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வசனமெழுதிய படங்களில் நடித்திருக்கிறார் மேலும் இவர்கள் இருவருடன் இணைந்து மேடை நாடகங்களில் பங்கு பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோருடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். மொத்தத்தில் ஆச்சி 5 முதல்வர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றிருக்கிறார்.

விருதுகள்
1௦௦௦ படங்களிற்கு மேல் நடித்து சாதனை புரிந்ததால் கின்னஸ் ரெக்கார்டில் மனோரமாவின் பெயர் இடம்பெற்றது. 1989 ம் ஆண்டு புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 2002 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார், மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

பெண் சிவாஜி கணேசன்
நடிகரும் அரசியல்வாதியுமான சோ அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் மனோரமாவின் நடிப்பைப் பார்க்கும்போது அவரை ஒரு பெண் சிவாஜி கணேசன் என்றே சொல்லத் தோன்றுகிறது என்று கூறினார்.

காதல் திருமணம்
நடிப்புலகில் சாதனை பல புரிந்த மனோரமாவின் நிஜ வாழ்க்கை சோகமயமானது. காதலித்து மணம் புரிந்த எஸ்.எம்.ராமநாதனை விட்டு 2 வருடங்களிலேயே விலகிவிட்டார்.தனது ஒரே மகன் பூபதியுடன் தனது வாழ்க்கை முழுவதும் தனித்தே வாழ்ந்தவர் மனோரமா.

உடல்நலக்குறைவு
பல்வேறு உடல்நலக்குறைவுகளால் அவதிப்பட்டு வந்த ஆச்சி நேற்று இரவு 11 மணிக்கு தனது இன்னுயிர் வாழ்க்கையை நீத்தார். அவரைப் போன்ற ஒரு நடிகையை இனி இந்தத் திரையுலகில் காண்பது அரிது.


Click it and Unblock the Notifications











