நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது..நடிகையும் எம்.பியுமான சுமலதாவுக்கு கொரோனா..வீட்டில் சிகிச்சை
பெங்களூரு: பிரபல நடிகையும் மண்டியா தொகுதியின் எம்.பி.யுமான சுமலதாவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழில் திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தவர் சுமலதா.
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷை காதலித்து 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

மண்டியா தொகுதி
இவர்களுக்கு அபிஷேக் கவுடா என்ற மகன் இருக்கிறார். அம்பரீஷ் மறைவுக்குப் பிறகு, அவருடைய மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார் சுமலதா. அவரை எதிர்த்து போட்டியிட்டது, கன்னட முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. மண்டியா தொகுதியில் கொரோனாவுக்காக தொடர்ந்து பணிபுரிந்து வந்தார் சுமலதா.

தொண்டை எரிச்சல்
இதற்கிடையே தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சனிக்கிழமை அன்று லேசான தலைவலி, தொண்டை எரிச்சலுக்கான அறிகுறிகள் இருந்தன. எனது தொகுதிக்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால் பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்தேன்.

வீட்டிலேயே சிகிச்சை
முடிவுகள் வந்தன. எனக்குத் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கிறேன். கடவுள் அருளால், எனது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது. இதை விரைவில் உங்கள் ஆதரவுடன் கடந்து வருவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

பரிசோதனை
நான் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்திருப்பேன் என்ற பெயர்களை அரசு அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெல்வோம். இவ்வாறு சுமலதா கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











