பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி.. தொடர்ந்து சிகிச்சை.. என்ன நடந்தது?
சென்னை: மூத்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் தனது மகள் வீட்டில் இருந்த பாரதி ராஜா, கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, முதல் படத்திலேயே திறமையான இயக்குநர் என பெயர் எடுத்தார். மேலும், ஸ்டூடியோவுக்குள் செட் போட்டு படங்கள் எடுத்துக்கொண்டிருந்த காலத்தில், இயற்கையோடு இயற்கையாக இணைந்து தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா தான்.

இயக்குநர் பாரதிராஜா: கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை , வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, கடலோரக் கவிதைகள், கல்லுக்குள் ஈரம், கைதியின் டைரி என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை அனைவரும் திரும்பி பார்க்க வைத்தார். அதுமட்டுமில்லாமல், இன்று நாம் திரையில் பார்த்து கொண்டாடும் ராதிகா, ராதா, கார்த்திக், ரேவதி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, சுகன்யா, பாண்டியன், அருண் பாண்டியன், விஜயன், நெப்போலியன் என பல நடிகர்களை அறிமுகம் செய்துள்ள பாரதிராஜா, சிவாஜி நடிப்பில் இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் இன்றைக்கும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக எவர் கிரின் திரைப்படமாகவே உள்ளது.
என்ன ஆச்சு: இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள பாரதி ராஜா, வயது மூப்பு காரணமாக படங்களை இயக்குவது,நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்த. இவரது, ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த வேதனையில் இருந்து மீளமுடியாமல் தவித்து வந்த பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











