Mamukkoya death: கால்பந்தாட்ட மைதானத்தில் சுருண்டு விழுந்த காமெடி நடிகர் மாமுக்கோயா காலமானார்
திருவனந்தபுரம்: கேரள சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்த பிரபல மலையாள காமெடி நடிகர் மாமுக்கோயா காலமானார். அவரது வயது 76.
மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக அசத்தி வந்தவர் மாமுக்கோயா. நம்ம ஊரில் எப்படி கவுண்டமணி, செந்திலோ அதே போல கேரளாவில் இவர் தனது நகைச்சுவை திறமையால் பல கோடி மக்களை சிரிக்க வைத்துள்ளார்.

தொடர்ந்து நகைச்சுவை நடிகர்கள் உயிரிழந்து வரும் நிலையில், மாமுக்கோயாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மாமுக்கோயா மரணம்: 1946ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கேரளாவில் பிறந்த மாமுக்கோயா 1979ல் அன்யாருடே பூமி படத்தில் அறிமுகமானார். மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்களின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள இவர் மாரடைப்பு காரணமாக இன்று (புதன்கிழமை) கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
மாமுக்கோயாவின் மரணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பல முன்னணி நடிகர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
எப்படி இறந்தார்?: மல்லாபுரத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியை மைதானத்தில் நேரில் சென்று கண்டு ரசித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார் மாமுக்கோயா. உடனடியாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவருக்கு மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரசிகர்களை அழ வைத்த மாமுக்கோயா: பல ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நடிகர் மாமுக்கோயா முதல் முறையாக ஒட்டுமொத்த மலையாள ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகின் பல முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மோகன்லால் உடன் மாமுக்கோயா நடித்த படங்களின் தொகுப்புகளையும் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











