HBD Kannadasan - வள்ளுவனையே வம்புக்கு இழுத்தவர் - பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணதாசன்
சென்னை: Happy Birthday Kannadasan (பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணதாசன்) காமத்தில் பிறக்கும் குழந்தைக்குதான் பொருள் தேவை. பொருள் தேடப்போகும்போது அறம் தேவை. நிலைமை இப்படி இருக்க அறம் எப்படி முன்னால் வரும் என்று ஒரே போடாக போட்டு வள்ளுவனையே வம்புக்கு இழுத்தவர் கண்ணதாசன்
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் கண்ணதாசனை தாண்டி இன்றுவரை யாரும் இல்லை. 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் அவர் தனது வாழ்க்கையையும், அனுபவத்தையும் வைத்து பாடல்கள் எழுதியவர். அதனால்தான் அவர் இறந்து பல வருடங்கள் ஆன பிறகு கவியரசர் என்ற இடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. ஏன் வாலிப கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து என அவருக்கு பின் பல கவிஞர்கள் வந்தாலும் கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தில்தான் தங்களை வைத்துக்கொள்வார்கள்.
என்ன காரணம்?: கண்ணதாசனை யாராலும் அசைக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம். பெரிதாக ஆராய வேண்டியதில்லை. அவர் தனது பாடலுக்கான வரிகளை தன்னுடைய வாழ்க்கையிலிருந்து ரத்தமும் சதையுமாக எடுத்தார். அது அந்த தலைமுறைக்கு பொருந்தியது. இந்த தலைமுறைக்கு பொருந்துகிறது. இனி எந்த தலைமுறைக்கும் பொருந்தக்கூடியது. அதனால்தான் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை அல்லது அருகில் நெருங்க முடியவில்லை.
உதாரணம் இதுதான்: உதாரணமாக ஒரு பாடலை எடுத்துக்கொள்ளலாம். சிவாஜி நடித்த பழனி படத்தின்போது கண்ணதாசனுக்கு கொஞ்சம் வாய்ப்புகள் குறைந்திருந்த சமயம். ஏனெனில் வாலி உள்ளே வந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்த சமயம். கண்ணதாசனுக்கோ பிள்ளைகள் ஏராளம். தீபாவளி வந்தபோது கண்ணதாசனிடம் பணம் குறைவாகத்தான் இருந்தது.
அப்போது செல்வாக்கு மிகுந்த அவரது அண்ணனிடம் பணம் கேட்கலாம் என்று சென்றவருக்கு ஏமாற்றமே மிச்சம். அதை வைத்து அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடலை எழுதியதாக ஒரு தகவல் உண்டு. இப்போது இல்லை தமிழ் உயிர்கள் உள்ளவரை சொந்தத்துக்குள் ஏதேனும் பிரச்னை வந்தால் இந்தப் பாடல்தான் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

மகனை வைத்தே எழுதிய பாடல்: அதேபோல் அவரது ஒரு மகன் ஒருமுறை கண்ணதாசனிடம் சென்று ஏன் அப்பா எனக்காக எந்தப் பாடலும் எழுதவே இல்லை என கேட்கிறார். அதற்கு கண்னதாசனோ எழுதிட்டா போச்சு என்ற தொனியில் பார்த்துவிட்டு, 'ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய் மகனே' பாடலை எழுதினார். தன்னுடைய மகனை வைத்து இப்படி ஒரு பாடல் எழுதுவதற்கு கண்ணதாசனை விட்டால் யாருக்கு தைரியம் இருக்கிறது. யாருக்கு ஞானம் இருக்கிறது. அவர் ஞானத்தில் ஊறியவர்.
கவிஞன் மட்டுமில்லை மனிதனும்: கவிஞனாக மாறிவிட்டாலே தான் ஒரு படைப்பவனுக்கு சமானம் என நினைத்து மனிதத்தை தொலைத்த கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் கண்ணதாசனோ அப்படி இல்லை. ஒரு பார்ட்டியில் வாலியை விவகாரமான விஷயத்தில் காவல் துறையிடம் கோர்த்துவிடலாம் என்ற ஐடியா கண்ணதாசனுக்கு செல்ல உடனே கோபப்பட்டு ரங்கராஜன் (வாலியின் இயற்பெயர்) என்னை நம்பி வந்துருக்கான் அதெல்லாம் கூடாது என கண்டிப்புடன் மறுத்து மனிதத்தை காத்தவர். இதனை வாலியே தனது நினைவு நாடாக்கள் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அனைத்திலும் அமைதி கண்டவர்: அவர் எழுதிய கடைசி பாடல் கண்ணே கலைமானே. அதில் இப்படி ஒரு வரி எழுதியிருப்பார். ஊமை என்றால் அதில் ஒரு அமைதி, ஏழை என்றால் அதில் ஒரு அமைதி. இந்த வரிகளை எழுதுவதற்கு அவர் எவ்வளவு ஆழத்திற்கு சென்றிருக்க வேண்டும். அதேபோல் மூன்றாம் பிறையில் பூங்காற்று புதிதானது பாடலில் 'என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ' என்று எழுதியிருப்பார். நிச்சயமாக இந்த வரியை எழுதுவதற்கு ஒரு ஜென் நிலை வேண்டும். முக்கியமாக எந்த உறவையும் விதியென்று நினைத்து பழகாதீர்கள்.அப்படியே விதியானாலும் அதை உயிர் போல் நினைத்து காத்திடுங்கள் என போகிறபோக்கில் எவ்வளவு ஆழமான கருத்தை விதைத்து சென்றிருக்கிறார்.
வள்ளுவனையே வம்புக்கிழுத்தவர்: கண்ணதாசனை பொறுத்தவரை ஒரு விஷயத்தை இந்த உலகம் பார்க்கிறதே அதனால் நாமும் அதேபோல் பார்க்கலாமே என்று பார்க்கமாட்டார். அவர் இந்த சமூகம் போட்டு வைத்திருக்கும் சட்டகத்திற்கு அப்பாற்பட்டவர். ஆம் வள்ளுவர் எழுதியது அறத்து பால், பொருட் பால், காமத்து பால். திருக்குறளுக்கு உரை எழுதிய கண்ணதாசனோ அதை தலைகீழாக புரட்டிப்போட்டு காமத்து பால், பொருட் பால், அறத்து பால் என்று எழுதியவர்.
எழுதியவர் அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார். அதாவது காமத்தில் பிறக்கும் குழந்தைக்குதான் பொருள் தேவை. பொருள் தேடப்போகும்போது அறம் தேவை. நிலைமை இப்படி இருக்க அறம் எப்படி முன்னால் வரும் என்று ஒரே போடாக போட்டவர்.
அதேபோல் ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் ஜின் ஜினுக்கா சின்னக்கிளி பாடலி, "துன்பம் வரும் வேளையில சிரிங்க என்று சொல்லிவெச்சார் வள்ளுவரு சரிங்க; பாம்பு வந்து கடிக்கையிலே பாலும் உடல் துடிக்கையிலே யார் முகத்தில் வரும் சிரிப்பு" என கேள்வி கேட்டு வள்ளுவனையே வம்புக்கு இழுத்தவர். இப்படி பல விஷயங்களில் கண்ணதாசன் இந்த சமூகம் போட்டு வைத்திருந்த கோட்டை பல முறை மீறியவர்.
தேவையற்ற அடையாளம்: அதனால்தான் கண்ணதாசன் மீது சிலர் வேண்டுமென்றே ஒரு அடையாளத்தை குத்தினார்கள். அவருக்கு குடிகாரர் என்று சிலர் பெயர் சூட்டினாலும் எந்த குடியையும் கெடுக்காமல் தன் குடியை காத்துக்கொண்டு இருந்தவர். அவர் கோப்பையில் குடியிருந்ததாக பலரும் கூறினாலும் ரசிகர்கள் மனதில் அவர் கட்டியிருக்கும் கோட்டையை உடைத்து வேறு யாராலும் எப்போதும் ஊடுருவ முடியாது என்பதுதான் காலங்கடந்து நிற்கும் உண்மை. பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணதாசன்..


Click it and Unblock the Notifications











