சாதனை நாயகி... இசைக்குயில் ஜானகி!
ஹைதராபாத்: பாடகி எஸ்.ஜானகி 75-வது பிறந்தநாளை நேற்று குடும்பத்துடன் ஹைதராபாத்தில் கொண்டாடினார்
எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
இந்தியாவிலேயே திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்தவர் லதா மங்கேஷ்கர். ஆனால், 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர் எஸ்.ஜானகி.
எஸ்.ஜானகியின் 75-வது பிறந்தநாளை நேற்று அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் கொண்டாடினர். எஸ்.ஜானகி இதில் பங்கேற்று 'கேக்' வெட்டினார்.
எஸ்.ஜானகி மகன் முரளி கிருஷ்ணா மற்றும் உறவினர்கள், திரையுலகினர் பங்கேற்று எஸ்.ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்

சின்னத்தாயவள் தந்த...
ஜானகி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பிறந்தார்.

பாட்டுப்பாடவா...
சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. 1956-ல் அகில இந்திய வானொலி, பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு, இரண்டாம் பரிசு பெற்றார். அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத்திடம் பரிசு பெற்றார்.

காற்றே... எந்தன் கீதம்...
இதைத்தொடர்ந்து, ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமிக்கப்பட்டார். தமிழில், 'விதியின் விளையாட்டு' என்ற படத்துக்காக அவர் முதன் முதலாக பின்னணி பாடினார். இசை அமைத்தவர் டி.சலபதிராவ்.

இசைக்குயில், காட்டுக்குயிலானது...
இதற்கு அடுத்த நாளே, கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு பாடலைப் பாடினார். முதல் வருடத்திலேயே, எவ்வித முயற்சியும் செய்யாமல் 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார்.

கொஞ்சும் சலக்கையில் தொடங்கிய பயணம்...
ஜானகியின் வாழ்க்கையில், பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் 'கொஞ்சும் சலங்கை . இசைத்தட்டு விற்பனையிலும் சாதனை படைத்தது இப்படம். இதனைத்தொடர்ந்து, ஜானகி ரொம்பவும் `பிசி'யாகி விட்டார். அவர் பாடல் இடம் பெறாத படமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. எல்லா பிரபல கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்தார்.

சாதனை நாயகி...
ஒரே நாளில் நாலைந்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னணிப் பாடுவதில் ஜானகி நிகழ்த்தியுள்ள சாதனைகள் பல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சவுராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார்!

பாப்பா முதல் பாட்டி வரை...
அது மட்டுமல்ல. 5 வயது குழந்தையின் குரலிலும், 60 வயது கிழவியின் குரலிலும் (குரலை மாற்றி) பாடக்கூடிய ஆச்சரியமான திறமையும் அவருக்கு இருந்தது. சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.

மணியே... மணிக்குயிலே...
16 வயதினிலே' படத்தில் பாடிய ‘செந்தூரப் பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்றே' என்ற பாடலுக்கு இவருக்கு சிறந்த பாடலுக்கான தேசிய விருது கிடைத்தது. ‘தேவர் மகன்' படத்தில் இடம் பெற்ற ‘இஞ்சி இடுப்பழகா' பாடலுக்காகவும் இதே விருதை பெற்றார்.

அவருக்கு விருது வாங்கித் தந்த படங்கள்:
(1) 16 வயதினிலே (தமிழ்) 1978, ஓப்போல் (மலையாளம்) 1981, சிதாரா (தெலுங்கு) 1985, தேவர் மகன் (தமிழ்) 1993

விருதுகள் பலவிதம்....
இது தவிர 13 முறை கேரள அரசின் விருதையும், 5 முறை தமிழக அரசின் விருதையும், 7 முறை ஆந்திர அரசின் விருதையும், ஒரு முறை ஒரிசா அரசின் விருதையும் பெற்றவர். இது தவிர கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.

புறக்கணித்தார்...
எஸ்.ஜானகிக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அளித்து கவுரவித்தது. ஆனால் அதை ஏற்று ஜானகி மறுத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











