பிரபல பழம்பெரும் நடிகர் உடல்நலக் குறைவால் மரணம்... திரையுலகினர் இரங்கல்
பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை: பிரபல பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ் (73). தனது சிறு வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், மத்திய செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி இருக்கிறார்.

சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், ஐந்து முறை சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் மாநில விருது உள்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ரசிகர்கள் இவரை ரல்லப்பள்ளி என சுருக்கமாக அழைப்பர்.
வயோதிகம் காரணமாக, சமீபகாலமாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த இவர், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதனை அவரது குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர்.
ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவின் மறைவைக் கேட்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











