Pavala Shyamala Deid: தெலுங்கு சினிமாவின் மனோரமா பாவலா சியாமலா மரணம்.. சோகத்தில் டோலிவுட்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் மேலும் ஒரு சோகச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மூத்த நடிகை பாவலா சியாமளா காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, திங்கட்கிழமை நள்ளிரவு சுமார் 1.52 மணியளவில் பாவலா சியாமளாவுக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
நோய்களுடன் போராடிய கடைசி நாட்கள்: கடந்த சில ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பார்கின்சன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாவலா சியாமளா அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலையும் தொடர்ந்து மோசமடைந்தது. அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டதோடு, சிகிச்சை செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு அவர் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியிருந்தார்.

ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த நடிகை, தனது இறுதி காலத்தில் மருத்துவச் செலவுக்கே பிறரின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் ரசிகர்களையும் திரையுலகினரையும் வேதனையடையச் செய்தது. பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் நிதியுதவி செய்தாலும், அவரது உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
தாயும் மகளும் சந்தித்த வேதனை: பாவலா சியாமளாவின் மகள் மாதவியும் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தாயும் மகளும் சிகிச்சைக்காக பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருவரும் ஆதரவின்றி தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பாவலா சியாமளாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. கடந்த வாரம் மீண்டும் இதயப் பிரச்சனை தீவிரமடைந்ததை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏன் இவர் தெலுங்கு சினிமாவின் மனோரமா: 1951-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் பிறந்த பாவலா சியாமளா, முதலில் நாடக மேடைகளில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். "பாவலா" என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் அந்த நாடகத்தின் பெயரே அவருக்கு அடையாளமாக மாறியது. அதன் பிறகு அனைவரும் அவரை "பாவலா சியாமளா" என்றே அழைக்கத் தொடங்கினர். 1985-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடித்த 'பாபாய் அப்பாய்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், அதன் பின்னர் குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
40 ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகை: கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பாலும், முகபாவனைகளாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சுமார் 40 ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த பாவலா சியாமளாவின் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications